ADDED : ஜூலை 22, 2024 06:36 AM
நெலமங்களா: விவாகரத்தான பெண்ணுக்கு, திருமண ஆசை காண்பித்து 41 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது, வழக்கு பதிவாகி உள்ளது.
பெங்களூரு ரூரல், நெலமங்களாவில் வசிக்கும் 40 வயது பெண், திருமணமானவர். கருத்து வேறுபாடு காரணமாக, 11 ஆண்டுகளுக்கு முன், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
சில மாதங்களுக்கு முன், இப்பெண்ணுக்கு சிக்கபானவாராவில் வசிக்கும் விஷ்ணுகவுடா, 40, அறிமுகமானார். இவர் தன்னை போலீஸ் அதிகாரி என, கூறிக்கொண்டார்.
இவர் போலீஸ் சீருடை அணிந்த போட்டோவையும், துப்பாக்கி வைத்திருப்பதையும் பார்த்த அப்பெண், 'விஷ்ணுகவுடா போலீஸ் அதிகாரி' என, நம்பினார்.
பெண்ணுடன் நெருங்கி பழகிய விஷ்ணுகவுடா, திருமணம் செய்வதாக ஆசை காண்பித்தார்.
ஏதோ காரணங்களை கூறி, பெண்ணிடம் இருந்த 41 லட்சம் ரூபாய் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எல்.ஐ.சி., பாண்டை பெற்றுக்கொண்டார். சமீபத்தில் விஷ்ணு கவுடா போலீஸ் அதிகாரி இல்லை என்பது, அப்பெண் அறிந்தார்.
கோபமடைந்த பெண், தன் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்.
ஆனால் அவரது அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய விஷ்ணு கவுடா, பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக, சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில், அந்த பெண் புகார் அளித்தார்.
போலீசாரும் விஷ்ணு கவுடாவை தேடுகின்றனர்.