ADDED : ஆக 20, 2024 11:25 PM
ஹுன்சூரு: மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்காக, காட்டில் இருந்து, ஒன்பது யானைகள் கொண்ட கஜபடை, இன்று மைசூரு நகருக்கு புறப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, வரும் அக்டோபர் 3ம் தேதி சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவுவதன் மூலம் துவங்குகிறது. அக்., 12ம் தேதி வரை விழா நடக்கும்.
ஜம்பு சவாரி
தசரா விழாவின் பிரதான அடையாளமே, இறுதி நாளான விஜயதசமியன்று நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலம் தான். அதிலும், யானை மீது தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.
அந்த வகையில், சாமுண்டீஸ்வரி வீற்றிருக்கும் தங்க அம்பாரியை அபிமன்யூ என்ற யானை சுமக்கிறது. இது தவிர, மஹேந்திரா, கோபி, பிரசாந்த், தனஞ்செயா, சுக்ரீவா, வரலட்சுமி, லட்சுமி, தொட்ட ஹரவே லட்சுமி, ஹிரண்யா, பீமா, கன்ஜன், ரோஹித், ஏகலவ்யா ஆகிய 13 யானைகள் தசரா விழாவில் பங்கேற்கின்றன.
இந்த யானைகள், நாகரஹொளே, துபாரே, பண்டிப்பூர் ஆகிய வனப்பகுதி முகாம்களில் உள்ளன. மூன்று கட்டங்களாக, காட்டில் இருந்து, அவை மைசூரு நகருக்கு அழைத்து வரப்படுகின்றன.
முதல் கட்டமாக அபிமன்யூ, பீமா, கோபி, தனஞ்செயா, கன்ஜன், ரோஹித், லட்சுமி, வரலட்சுமி, ஏகலவ்யா ஆகிய ஒன்பது யானைகள், மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவில் உள்ள நாகரஹொளே வனப்பகுதியில் இருந்து இன்று மைசூரு நகருக்கு புறப்படுகின்றன.
இதற்காக, வனப்பகுதியை ஒட்டி உள்ள வீரனஹொசஹள்ளி கிராமத்தில் யானைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பூஜை செய்யப்படுகிறது.
அரண்மனை
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே முன்னிலையில், இன்று காலை 10:20 மணி முதல் 10:45 மணிக்குள் சுப முகூர்த்தத்தில், சமூக நலத்துறை அமைச்சரும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மஹாதேவப்பா, யானைகளுக்கு மலர் துாவி, அவைகளை லாரியில் ஏற்றி, மைசூருக்கு அனுப்பி வைக்கிறார்.
இந்த யானைகள், நாளை மைசூரு ஆரண்ய பவனுக்கு வந்துவிடும். அங்கிருந்து, வரும் 23ம் தேதி, அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படும். உடையார் மன்னர் பரம்பரையின் பிரமோதா தேவி, பாரம்பரிய முறைப்படி யானைகளை வரவேற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.