மழைநீர், சாக்கடை கால்வாய்களில் குப்பை; தங்கவயல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
மழைநீர், சாக்கடை கால்வாய்களில் குப்பை; தங்கவயல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
ADDED : மே 10, 2024 05:22 AM

தங்கவயல் : ''தங்கவயலில் மழைநீர் கால்வாய், சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை கொட்டக்கூடாது,'' என, நகராட்சி ஆணையர் பவன்குமார் எச்சரித்துள்ளார்.
தங்கவயலில் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக் பகுதியில் மழைநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம், பலரது வீடுகளில் புகுந்தது. விடிய விடிய வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். நகராட்சி மீது பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கழிவுகள் அகற்றம்
தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் பவன் குமார் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டு, துார் வாரப்பட்டது.
உரிகம் பேட்டை பிஷ் லைன் பகுதியில் வெள்ளம் ஆறாக ஓடியது. ஆயினும் நகராட்சியில் இருக்கும் தண்ணீர் உறிஞ்சும் வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அந்த இயந்திரம் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை.
கோலார் கலெக்டர் அக்ரம் பாஷா, தங்கவயல் தாசில்தார் ராம லட்சுமையா இருவருமே தங்கவயலில் தான் இருந்தனர். ஆனால், வெள்ள பாதிப்புகளை பார்க்க வரவில்லை. பாதிப்புகளை கவனிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்ததாக கலெக்டர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தங்கவயல் நகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய ஐந்து பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் ஐந்து மோட்டார் பம்ப்கள் நேற்று அவசர அவசரமாக வாங்கப்பட்டன. இதன் திறன், 7.5 எச்.பி., மற்றும் ஒரு நிமிடத்தில் 1,100 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும். ஒரு மோட்டார் பம்பின் விலை, தலா 70 ஆயிரம் ரூபாய்.
24 மணி நேரம் பணி
நகராட்சி ஆணையர் பவன் குமார் கூறுகையில், ''நகராட்சியின் சுகாதார நல அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 24 மணி நேரமும் சேவை செய்வர். மழை பாதிப்புகளை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
''மழைநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் தான் அதிகமாக காணப்பட்டன. இவற்றை மழை நீர் கால்வாய்கள், சாக்கடை கால்வாய்களில் போடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை செய்ய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
சுகாதார நல அதிகாரிகள்
சரஸ்வதி சண்முக சுந்தரி
மொபைல் எண்: 72596 70715
வார்டு எண் : 8 முதல் 16 வரை
மங்களகவுரி
மொபைல் எண்: 72046 59145
வார்டு எண்: 1 முதல் 7 மற்றும் 14, 17, 18 ஆகிய வார்டுகள்
முரளி
மொபைல் எண்: 78923 27164
வார்டு எண்: 29 முதல் 35 வரை
ஹரிஸ்
மொபைல் எண்: 63609 74001
வார்டு எண்: 19 முதல் 26 வரை