ADDED : மே 30, 2024 06:29 AM

கரும்பாறைகளை சுற்றிலும், கண்களை குளிர்விக்கும் பசுமையான காட்சிகளை பார்த்துள்ளீர்களா. பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், கரிபெட்டாவுக்கு வாருங்கள்.
இரவும், பகலும் கர்ண கடூரமான வாகனங்களின் சத்தம், வாட்டி வதைக்கும் போக்குவரத்து நெருக்கடி, எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி கட்டடங்கள், முகத்தில் மோதும் துாசி என, பரபரப்பான நகர வாழ்க்கையை விரும்புவோரை விட, வெறுப்போரே அதிகம்.
வாரம் ஒருநாள் கிடைக்கும் விடுமுறையை, குஷியாக, மனதுக்கு பிடித்தபடி அனுபவிக்க விரும்புவர். இவர்களை கரிபெட்டா கை வீசி அழைக்கிறது.
கரிபெட்டாவை பற்றி மைசூரு, மாண்டியா பகுதியினருக்கு, நன்றாக தெரிந்திருக்கும். பல திரைப்படங்களில், கரிபெட்டாவை காண்பித்துள்ளனர்.
படப்பிடிப்புக்கு தகுதியான இடம். சுற்றிலும் பசுமையான கானகத்தின் நடுவில், கரடு, முரடான மேட்டுப்பாதையில் ஏறி சென்றால், கரிபெட்டாவை அடையலாம்.
பசுமை போர்வையை போர்த்தியுள்ள இயற்கையை ரசித்தபடி, உடலை இதமாக வருடி செல்லும் குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி செல்வது, அற்புதமான அனுபவத்தை தரும்.
இந்த இனிமையான அனுபவத்தை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நாமாக அனுபவித்து பார்க்க வேண்டும்.
மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் கரிபெட்டா உள்ளது. மைசூரில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது. ஸ்ரீரங்கபட்டணா, மைசூருக்கு வெகு அருகில் உள்ளதால், மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர், கரிபெட்டாவுக்கு செல்கின்றனர்.
பொதுவாக ஸ்ரீரங்கபட்டணா, புண்ணிய தலமாகவும், வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. அதன் அருகிலேயே இயற்கை எழில் ஏராளமாக கொட்டி கிடக்கும், கரிபெட்டா அமைந்துள்ளது.
இங்கு வெங்கடரமணசுவாமி கோவிலும் உள்ளது. சுவாமியை தரிசனம் செய்வதுடன், இயற்கையின் மடியில் சிறிது நேரம் தவழ்ந்து செல்லலாம்.
கரிபெட்டாவில் கருமையான பாறைகள் உள்ளன. இதற்கிடையில் பெரிய மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்துள்ள இடமாகும். இங்குள்ள பாறைகள் எப்போதும் கருமையாக இருந்தால் தான் நல்லது என, சிலர் மரங்களுக்கு தீ வைக்கிறார்களாம்.
வெங்கடரமண சுவாமி குடிகொண்டுள்ளதால், திருத்தலமாக கருதப்படுகிறது. தன் சீடர்களுடன் பிருகு முனிவர் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட போது, கரிபெட்டாவுக்கும் வந்தார்.
வெங்கடரமண சுவாமிக்கு பூஜை, கைகங்கர்யங்களை செய்ய, சீனிவாசர் சிலையை பிரதிஷ்டை செய்தாக கூறப்படுகிறது. இந்த கோவிலை சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக, வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
கரிபெட்டா மலை அடிவாரத்தில், நுழைவாயில் உள்ளது. இங்கிருந்து 550 படிகளை ஏறி சென்றால், கோவிலை அடையலாம். இந்த படிகளை மைசூர் மஹாராஜா சிக்கதேவராஜ உடையார் கட்டினார்.
கரிபெட்டா கடல் மட்டத்தில் இருந்து 2,697 அடிகள் உயரத்தில் உள்ளது. கருமையான பாறைகள் அதிகம் இருப்பதால், கரிகிரி, மலையின் மேற்புறத்தில் மேகங்கள் தவழ்ந்து செல்வதால் நீலாசலா என, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கரிபெட்டா மலை உயரமான மலை என்பதால், திப்பு, மைசூரு மஹாராஜாக்கள் ஆட்சி காலத்தில், இங்கிருந்தே எதிரிகளை கண்காணித்தனர். எனவே காவல் கோபுரம், கோட்டை மலை என்றும் அழைக்கின்றனர்.
இதன் மேல் நின்று பார்த்தால், மாண்டியாவின் ஸ்ரீரங்கபட்டணா, கஞ்சாம், பாண்டவபுரா, குந்திபெட்டா, மேலுகோட்டே பகுதிகளும், மைசூரின் பல அழகான தலங்களும் தென்படுகின்றன.
மலை உச்சியில் இடிந்த கோட்டை உள்ளது. இது திப்பு காலத்தில் கட்டியதாம். சுற்றிலும் ஆங்கில சி எழுத்து வடிவில், 5 அடி உயரமான நான்கு சுவர்கள் உள்ளன.
தற்போது இடிந்த நிலையில் உள்ள கோட்டை மற்றும் சுவர்கள் வரலாற்றின் கதையை விவரிக்கின்றன கரிபெட்டாவுக்கு செல்ல, ஸ்ரீரங்கபட்டணாவில் இருந்து பஸ் மற்றும் தனியார் வாகன வசதி உள்ளது.
- நமது நிருபர் -