ADDED : ஜூலை 02, 2024 09:37 PM

பெங்களூரு : ''பதவி வேண்டும் என்பதற்கு பதிலாக, மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுங்கள்,'' என, அமைச்சர் ராஜண்ணாவுக்கு, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உபதேசம் செய்தார்.
'கர்நாடகாவில் கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும்' என, அமைச்சர் ராஜண்ணா அடிக்கடி ஊடகத்தினர் முன் கூறி வருகிறார். இதுதொடர்பாக, மைசூரில் நேற்று வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அளித்த பேட்டி:
பதவி வேண்டும் என்பவர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தால் போதும். ஊடகத்தினரிடம் தெரிவிப்பதால் பலனில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் எச்சரித்தும், இதை பற்றிப் பேசுகின்றனர். பொறுமையாக இருங்கள். அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
துணை முதல்வர் நியமனம் குறித்து அமைச்சர் ராஜண்ணா, மீடியாக்கள் முன் திரும்ப திரும்ப பேசுவது சரியல்ல. தனக்கு பதவி வேண்டும் என்பதற்கு பதிலாக, மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்தால் அரசுக்கும், மக்களுக்கும் நல்லது.
அரசு நிகழ்ச்சியில், சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்று சுவாமிகள் கூறியது சரியல்ல. மாநிலத்தின் 31 மாவட்டங்களில், 24 மாவட்டங்களில் இயல்பை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது. ஏழு மாவட்டங்களில் இயல்பை விட, குறைவாக மழை பெய்துள்ளது.
மழைக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மழையால் ஏற்பட்ட சேதத்தை ஈடுகட்ட, நிதி உள்ளது. எதிர்காலத்தில் அதிக மழை பெய்தால், மத்திய அரசிடம் நிவாரணம் பெறுவோம்.
மாநிலத்தில் அரசு நிலங்களை பாதுகாக்க, ஆய்வு நடந்து வருகிறது. மாநிலத்தில், மொத்தம் 14 லட்சம் அரசு நிலங்கள் உள்ளன. இதில், எத்தனை ஆக்கிரமிப்பு உள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பை துவக்கி உள்ளோம்.
இம்மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு முடிந்து, அதன்பின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கும். ஆக்கிரமிப்பு இடம் குறித்து, பொதுமக்களுக்கு தகவல் அளித்த பின், அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.