ADDED : பிப் 14, 2025 11:02 PM
பயனற்ற 'குடா'
இதுவரையில் கோல்டு சிட்டியில் மேம்பாட்டு குழுமம் எனும், 'குடா' இருக்குது. இதுவரையில் ப.பேட்டையில் இருந்து 4 பேர், கோல்டு சிட்டி கிராமத்தில் இருந்து 4 பேர், சிட்டியில் இருந்து 6 பேர் என அவ்வப்போது தலைவர்களை மா.அரசு நியமனம் செய்தாங்க.
இவர்களில் முதல் தலைவராக தேர்வான கைக்காரர் மட்டுமே, ஒரு லே - அவுட் உருவாக்கினாரு. இது தவிர வேறொரு லே - அவுட்டை யாருமே உருவாக்கல.
பாராண்ட ஹள்ளி பக்கத்தில், 120 ஏக்கரை தயார் செய்து பல ஆண்டுகள் ஆகுது. பெயர் பலகையை நிறுவினரே தவிர, அங்கு ஒரு வீட்டு மனையும் உருவாக்கல. எதுக்கு இந்த குடா. யாருக்காக, உருவாக்கினாங்களோ. தலைவரா பதவிக்கு வர்றவங்கள காரில் பவனி வர செய்திருக்காங்க. மாதந்தோறும் கவுரவ சம்பளம் கொடுத்தாங்க.
இதுக்கென இருக்கிற ஆபீசில் 4 பேர் மட்டுமே அரசு ஊழியர்கள். மத்தவங்க கூட நிரந்தரம் இல்லாதவங்க. இப்படி இருக்க சிட்டி எப்படி மேம்படும்?
டீலா... நோ டீலா?
ப.பேட்டையில் அடுக்கு மாடி கட்டடம் எல்லாத்தையும் இடித்து நொறுக்கி, சாலையை அகலப்படுத்திட்டாங்க. தேசிய நெடுஞ்சாலை போல, அந்த சாலைக்கு மதிப்பு கூடியது. ஏன்னா அங்கு 'நோ டீல்'. அதே போல ஆலமரம் பகுதியில் விருப்போ, வெறுப்போ செங்கோட்டை பூக்கார முனியால் உடைத்து போட்டாங்க. சாலை அகலப்படுத்தினாங்க; அப்பவும் நோ டீல்.
கோல்டு சிட்டியில் அ.நகர், ஆ.பேட்டை, உரிகம் சதுக்கம் பகுதியிலும், ஏழைங்க கட்டடம் எல்லாம் உடைத்து நொறுக்கினாங்க. அங்கேயும் நோ டீல்.
ஆனால், ரா.பேட்டை அரசு ஆஸ்பிட்டல் அருகில் துவங்கி பல கட்டடங்கள் உள்ள இடத்தில் சாலை, நடைபாதை, விரிவாக்கம் செய்ய ஆக்ரமிப்புகளை அகற்றுவாங்களா அல்லது 'டீல்' முடிப்பாங்களா. இதுக்காகவே பெரிய பெரிய டீலர்கள் பேச்சு நடத்துறாங்களாமே.
எதுக்கு அவுட் போஸ்ட்?
உ.பேட்டையில் காலியாக இருந்த, 'கார்னர் சைட்' மனையை அபகரிக்க முக்கிய புள்ளிகள் முயற்சி செய்தாங்க. ஆனால் அதுக்கு இடம் கொடுக்காமல் ஊர் ஜனங்க ஒண்ணு கூடி, காக்கியின் அவுட் போஸ்ட் ஏற்படுத்தினாங்க.
சில ஆண்டுகள் மட்டுமே ரெண்டு, மூணு காக்கிகள் பணியில் இருந்தாங்க. இப்போது அந்த கட்டடம் மட்டும் உள்ளதே தவிர, அங்கு டியூட்டியில் யாரையும் காணோம்.
இங்குள்ள அவுட் போஸ்ட், எதுக்கும் பயன்படாமல் வேஸ்ட் ஆகியுள்ளது. சில நேரங்களில் காக்கிகளின் ரெஸ்ட் ஹவுஸ் போல இருந்ததா சொல்றாங்க. ரெஸ்ட் ஹவுஸோ, கெஸ்ட் ஹவுஸோ! ஜனங்களோட பாதுகாப்புக்கு வழியில்லாமல் போயிருக்கு. இதனை காக்கி மேலிடம் கவனிக்க வேணுமுன்னு சிட்டிசன்கள் சொல்றாங்க.
மீட்கப்படுமா ஏரி நிலம்?
லோக் ஆயுக்தா ஆபீசர்கள் வந்து போனதில் இருந்து அரசு ஆபீசுகள், 'அலர்ட்' ஆகியுள்ளன. அடிக்கடி தாலுகா நிர்வாக ஆபீஸ் விழிப்போடு இருக்காங்க. ஏஜன்டுகள் நடமாட்டம் தணிந்திருக்குதாம். கிராமத்து பஞ்சமி நிலங்கள் தான் குளறுபடி இருப்பதாக சொல்றாங்க.
மயானம் இல்லாத கிராமங்களில் உடனடியாக அதற்கான நிலம் ஒதுக்குறாங்க. மயான நிலம் அபகரித்தவங்க மீது, சட்டம் அதன் கடமையை செய்யும் என்று மேலதிகாரிகள் உத்தரவு போட்டிருக்காங்க. மயான நிலம் போல ஏரி நிலமும் ஆக்கிரமிப்பில் இருப்பதை எப்போது பறிமுதல் செய்வாங்களோ?

