ADDED : ஜூலை 11, 2024 04:37 AM

பெங்களூரு, : 'போலீசார் இருக்கின்றனர்; பார்த்துச் செல்லுங்கள்' என, இரு சக்கர வாகன ஓட்டிகளை 'கூகுள் மேப்' எச்சரித்து வருகிறது.
பெங்களூரில் முக்கியமான சாலைகள், சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோரிடமிருந்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தான், போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டு அபராதம் செலுத்துவர்.
இந்நிலையில் பெங்களூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும், முக்கிய இடங்களை கண்டறிந்து, கூகுள் மேப்பில் ஒருவர் இணைத்துஉள்ளார்.
கூகுள் மேப் போட்டு வாகனத்தில் செல்லும்போது, போக்குவரத்து போலீசார் இருக்கும் இடங்கள் வரும்போது, 'போலீஸ் இதாரே, நோட்கோண்ட் ஹோகி' என கன்னடத்தில் எச்சரிக்கை வருகிறது. அதாவது, 'போலீசார் இருக்கின்றனர்; பார்த்துச் செல்லுங்கள்' என்பதே அர்த்தம்.
இந்த எச்சரிக்கையின் மூலம் போக்குவரத்து போலீசாரிடமிருந்து, போக்குவரத்து விதிகளை மீறும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தப்பி வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன.
கூகுள் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் எச்சரிக்கை.

