ADDED : மே 28, 2024 01:43 AM
புதுடில்லி, “பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜம்மு - காஷ்மீரில் அரசு வேலை கிடையாது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பயங்கரவாதிகளை மட்டும் குறி வைத்து அழிக்காமல், அதன் ஒட்டுமொத்த சூழலையும் வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இதன் விளைவாக, நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில், யாராவது ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தால், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த அரசு வேலையும் கிடைக்காது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இதேபோல், யாராவது பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் சம்பவத்தில் ஈடுபட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை கிடையாது.
இந்த முடிவுகளுக்கு எதிராக, சில மனித உரிமை அமைப்புகள் உச்ச நீதிமன்றம் சென்றன. ஆனால், இறுதியில் அரசே இதில் வென்றது.
இந்த விவகாரத்தில், பயங்கரவாத இயக்கத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்துள்ளது குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
ஓர் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்படும் போது முதலில் சரணடைய சொல்லி எச்சரிக்கை விடப்படும்.
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாகவும் இது குறித்து பேச்சு நடத்தப்படும்.
இதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் மரணம் தான் நிச்சயம். இதுபோன்ற கெடுபிடிகளால் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.