'ரிசார்ட், ஹோம் ஸ்டே'க்களுக்கு அரசு விதிமுறைகள் அறிவிப்பு
'ரிசார்ட், ஹோம் ஸ்டே'க்களுக்கு அரசு விதிமுறைகள் அறிவிப்பு
ADDED : மார் 11, 2025 11:04 PM
பெங்களூரு; கொப்பாலில் வெளிநாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, ரிசார்ட்கள், ஹோம் ஸ்டேக்களுக்கு, புதிய விதிகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
கொப்பால் மாவட்டம், கங்காவதியின் ஆனேகுந்தி கிராமத்தில் உள்ள, 'ஹார்ட்லாண்டு ஹோம் ஸ்டே'யில் தங்கியிருந்த இஸ்ரேல் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நடவடிக்கை
இதுதொடர்பாக, மாநில உள்துறை கூடுதல் முதன்மை செயலர் உமாசங்கர், மாநில டி.ஜி.பி., மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
சுற்றுலா தலங்களில் உள்ள ஹோம் ஸ்டேக்கள், அங்கு தங்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
சுற்றுலா பயணியரை தனிமையான இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அப்பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் தகவல் அளிக்க வேண்டும்.
ஒருவேளை சுற்றுலா பயணியரை தனிமையான அல்லது வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அசம்பாவிதம் ஏற்பட்டதால், அதற்கு ஹோம் ஸ்டே உரிமையாளரே பொறுப்பாளியாவார். அவர் மீது தண்டனைக்குரிய வழக்குப் பதிவு செய்யப்படும்.
இது சம்பந்தமாக உங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரிசார்ட் மற்றும் ஹோம் ஸ்டேக்கும் தேவையான வழிமுறைகளை, தனிப்பட்ட முறையில் செயல்படுத்தி, அவர்களிடம் இருந்து வாக்குறுதிகளை பெற வேண்டும்.
ஒவ்வொரு ரிசார்ட், ஹோம் ஸ்டேயிலும், தங்குவோர், எங்கெங்கு செல்கின்றனர் என்பதை கேட்டுப் பெறுங்கள். அதில், அவர்கள் செல்லும் ஆபத்தான பகுதி இல்லை என்றால், அனுமதி அளிக்கலாம்.
ஒரு வாரத்துக்குள் இந்த செயல்முறையை மேற்கொண்டு, இம்மாதம் 18ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.