காலிப்பணியிடங்கள் விவகாரம் அரசுக்கு கவர்னர் கண்டனம்
காலிப்பணியிடங்கள் விவகாரம் அரசுக்கு கவர்னர் கண்டனம்
ADDED : ஆக 09, 2024 02:12 AM
சிவில் லைன்ஸ்:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்கள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும், சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜுக்கும் துணை நிலை கவர்னர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்பும் விவகாரத்தில் கண்காணிப்புக்குழுவை உயர் நீதிமன்றம்அமைத்துள்ளதன்வாயிலாக, துணைநிலை கவர்னரின் பொய்கள் அம்பலமானதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியிருந்தது.
காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கவர்னர் மாளிகைக்கு ஏராளமான கடிதங்கள் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென, மாநில அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடந்த ஞாயிறன்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக துணைநிலை கவர்னர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் விவகாரத்தில் மக்களையும் நீதித்துறையையும் தவறாக நடத்து வதற்காக ஆம் ஆத்மி அரசு மற்றும் டில்லி சுகாதார அமைச்சர் சவுரப்பரத்வாஜ் பொய்யான வலையை நெய்துள்ளனர்.
தனது மற்றும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் மகத்தான தோல்விகளை மறைப்பதற்காக அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தினந்தோறும் பொய் வலையை பின்னி வருகிறார்.
என்.சி.சி.எஸ்.ஏ., எனும் தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் வாரியத்துக்கு தலைவராக இருப்பவர் முதல்வர். உண்மையிலேயே காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு அக்கறை இருக்குமானால், இதன் கூட்டத்தை முதல்வரோ அல்லது அமைச்சரோ கூட்டி தேவையான நடவடிக்கை எடுத்திருப்பர். கடிதம் எழுதியிருக்கமாட்டார்கள்.
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு என்.சி.சி.எஸ்.ஏ., தலைவருக்கு கடிதம் எழுதாமல், கவர்னர் மாளிகைக்கு கடிதம் எழுதியது ஏன்?
கடிதங்கள் எழுதிதவறான, பொய்யான பிம்பத்தை உருவாக்க ஆம் ஆத்மி அரசும் பரத்வாஜும் முயற்சி செய்கின்றனர்.
பணி நியமனத்தில் தாங்கள் விரும்பிய நபர்களை நியமிப்பதற்காக தங்கள் விளையாட்டை மீண்டும் விளையாடுகின்றனர்.
பிப்ரவரியில் நடந்த என்.சி.சி.எஸ்.ஏ., கூட்டத்தில்மருத்துவர்களின் காலிப்பணியிடங்கள் குறித்து முதல்வர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இடைக்கால ஜாமினில் வெளியே வந்தபோதும் முதல்வருடன் அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கவில்லை.
இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.