ADDED : ஆக 25, 2024 12:36 AM
புதுடில்லி,
''கத்தாரில், சீக்கியர்களின் புனித நுாலான, 'குரு கிரந்த சாஹிப்'பின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்,'' என, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான கத்தார் தலைநகர் தோஹாவில், அந்நாட்டு அரசு அனுமதியின்றி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த நபர்கள், மத ரீதியாக அமைப்பை நிறுவி நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த அமைப்பில், சீக்கியர்களின் புனித நுாலான, குரு கிரந்த சாஹிப்பின் பிரதிகளும் வைக்கப்பட்டிருந்தன. அரசு அனுமதியின்றி மத அமைப்பை உருவாக்கியதாகக் கூறி, குரு கிரந்த சாஹிப்பின் பிரதிகளை, கத்தார் அரசு அதிகாரிகள் சமீபத்தில் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
இந்த விவகாரம் குறித்து, கத்தார் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட புனித நுாலின் ஒரு பிரதியை, கத்தார் அதிகாரிகள் ஒப்படைத்து விட்டனர்.
மீதமுள்ளவை விரைவில் திரும்பப் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

