ADDED : செப் 14, 2024 11:39 PM

கொப்பால் தாலுகா, நீரழகி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தேஷ், விநாயக், சங்கர், தவண குமார். இவர்களில் அந்தேஷ், சங்கர், விநாயக் பி.எஸ்சி., பட்டதாரிகள். தவண குமார் பி.எட்., படித்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் கிராமத்தைச் சேர்த்த பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்து வருகின்றனர்.
தங்கள் சேவை குறித்து அவர்கள் கூறியதாவது:
கொரோனா நேர ஊரடங்கில், பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்விக்காக அவர்கள் பரிதவித்தனர்.
இதனால் மாணவர்களுக்கு இலவச டியூஷன் கற்றுக் கொடுக்க முடிவு செய்தோம். எங்களிடம் 80 மாணவர்கள் டியூஷன் படித்தனர். இப்போது 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். தினமும் வகுப்பு துவக்கும் முன்பு பிரார்த்தனை செய்கிறோம்.
மாணவர்களுக்கு பொது அறிவும் கற்றுத் தருகிறோம். இதனால் எங்களுக்கு மகிழ்ச்சி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டியூஷன் படிக்கும் மாணவர்கள் கூறியதாவது:
கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள, எங்களிடம் மொபைல் போன், லேப்டாப் இல்லை.
அண்ணன்கள் நான்கு பேரும் எங்கள் கல்விக்கு உதவி செய்தனர். பள்ளிக்கு செல்ல முடியாமல் கல்வி பாதிக்கபடுமோ என கவலை இருந்தது.
எங்கள் கவலையை அண்ணன்கள் போக்கினர். பொது அறிவு பற்றி கற்றுத் தருகின்றனர். அடிக்கடி தேர்வு வைக்கின்றனர். பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.
இவ்வாறு மாணவர்கள் கூறினர்.
--- நமது நிருபர் - -