'கிரஹலட்சுமி' திட்டம் ரூ.25,248 கோடி: செலவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
'கிரஹலட்சுமி' திட்டம் ரூ.25,248 கோடி: செலவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 30, 2024 11:51 PM
பெங்களூரு:
கர்நாடக அரசின் மிக முக்கியமான திட்டமான, 'கிரஹலட்சுமி' திட்டம் துவங்கி நேற்றுடன், ஓராண்டு நிறைவடைந்தது. இதுவரை பெண்களின் வங்கி கணக்குக்கு, 25,248 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 'இத்திட்டத்தால் மாநில அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்' என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஐந்து வாக்குறுதித் திட்டங்களை அறிவித்திருந்தது. கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின், கட்டம், கட்டமாக திட்டங்களை அரசு செயல்படுத்தியது. இவற்றில் குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'கிரஹலட்சுமி' திட்டமும் ஒன்று.
1.25 கோடி பெண்கள்
ஐந்து திட்டங்களில், மிகவும் அதிகமான பணம் செலவிடும் திட்டம் கிரஹலட்சுமி. 2023 ஜூன் 19 முதல் திட்டத்துக்கு பெயர் பதிவு துவங்கியது. இதுவரை மாநிலத்தில் 1.25 கோடி பெண்கள் பதிவு செய்துள்ளனர். அதே ஆண்டு ஆகஸ்ட் 30ல், மைசூரில் நடந்த நிகழ்ச்சியில், காங்., - எம்.பி., ராகுல், திட்டத்தை துவக்கி வைத்தார்.
'கிராமம் ஒன், பெங்களூரு ஒன், கர்நாடகா ஒன், பாபூஜி சேவா' மையங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் சேவா சிந்து இணையதளத்தில் திட்டத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான பெண்கள், இப்போதும் விண்ணப்பிக்க அனுமதி உள்ளது.
பி.பி.எல்., - ஏ.பி.எல்., அந்த்யோதயா ரேஷன் கார்டுகள் உள்ள குடும்பங்களில், ஒரு பெண் மட்டுமே திட்டத்தின் பயனாளிகளாக அனுமதி உள்ளது. வருமான வரி, ஜி.எஸ்.டி., செலுத்துவோர் உட்பட செல்வந்தர்கள் பயன் பெற முடியாதபடி, கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
நிதி வழங்கல்
முதல்வர் சித்தராமையா, 'கிரஹலட்சுமி' திட்டத்துக்கு, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் 26,608 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். பயனாளிகள் எண்ணிக்கையில், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சொந்த மாவட்டமான பெலகாவி முதல் இடத்தில் உள்ளது. இங்கு 9 லட்சத்து 83 ஆயிரத்து 766 பயனாளிகள் உள்ளனர்.
2வது இடத்தில் உள்ள பெங்களூரு நகரில், 8 லட்சத்து 20 ஆயிரத்து 194 பயனாளிகள்; மூன்றாம் இடத்தில் உள்ள மைசூரில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 222 பயனாளிகள்; கடைசி இடத்தில் உள்ள குடகு மாவட்டத்தில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 425 பயனாளிகள் உள்ளனர்.
கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களின் கணக்கில் 25,248 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 'ஒரே திட்டத்துக்கு இவ்வளவு ரூபாய் செலவிட்டால், பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்' என, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.