'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவுக்கு கர்நாடக மேல்சபையிலும் ஒப்புதல்
'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவுக்கு கர்நாடக மேல்சபையிலும் ஒப்புதல்
ADDED : மார் 13, 2025 12:15 AM

பெங்களூரு : 'கிரேட்டர் பெங்களூரு' திருத்த மசோதாவுக்கு, கர்நாடக மேல்சபையிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியை 7ஆக பிரித்து 400 வார்டுகளை உருவாக்கும் நோக்கில் 'கிரேட்டர் பெங்களூரு' திருத்த மசோதா கடந்த 10ம் தேதி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
மேல்சபையில் மசோதாவை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று தாக்கல் செய்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதா மீது விவாதம் நடத்தினர்.
மாவட்டம் பிரிப்பு
அப்போது, சிவகுமார் பேசியதாவது:
இந்த மசோதா மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். பெங்களூருக்கு கெம்பே கவுடா நல்ல அடித்தளம் அமைத்தது போன்று, நாமும் காலத்திற்கு ஏற்ப அடித்தளம் அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கிரேட்டர் பெங்களூரு மூலம், பெங்களூரை பிரிக்க முயற்சி செய்யவில்லை. நகரை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், தெலுங்கானா மாநிலங்களிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மைசூரு மாவட்டம் பிரிக்கப்பட்டு சாம்ராஜ்நகர் தனி மாவட்டம் ஆனது. பெங்களூரு பிரிக்கப்பட்டது, பெங்களூரு ரூரல், ராம்நகர் மாவட்டங்கள் உருவாகின.
கதக் மாவட்டம் ஹாவேரி ஆனது. இவை அனைத்தும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, நிர்வாக காரணங்களுக்காக நடந்தது.
புனைப்பெயர்
உலக தலைவர்கள் முதலில் பெங்களூரு வந்துவிட்டு, பின், இந்தியாவின் பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார். எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது, பெங்களூரு வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.
பெங்களூரு மேம்படுவதற்கு மன்னர்கள் கால பராம்பரியம், கலாசாரம், பருவநிலை, கல்வி, இயற்கை ஆகிய காரணிகளும் அடக்கம்.
பெங்களூரு ஐ.டி., நகரம் உட்பட பல புனைப்பெயர்களை பெற்றுள்ளன. இங்கு திறமையான மனித வளங்கள் உள்ளன. இந்த நகருக்கு புது தோற்றம் அளிக்க நீண்ட விவாதத்திற்கு பின், கிரேட்டர் பெங்களூரு மசோதாவை உருவாக்கி உள்ளோம்.
கிரேட்டர் பெங்களூரு துணை தலைவராக, பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் இருக்க முடியும் என்று மசோதா கூறுகிறது. ஆனால் இதை பா.ஜ., தலைவர்கள் எதிர்க்கின்றனர்.
பா.ஜ., ஆட்சியின்போது பெங்களூரு நகர அமைச்சர்களாக கட்டா சுப்பிரமணிய நாயுடு, அசோக் நியமிக்கப்பட்டனர். வாய்ப்பு இருந்தால் ம.ஜ.த., - எம்.எல்.சி.,க்கள் போஜேகவுடா, ஷரவணா அமைச்சர் ஆகலாம். பெங்களூரு நகர அமைச்சர்களாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பேசிய எம்.எல்.சி., ஷரவணா, ''சிவன் வாயில் இருந்து வார்த்தை வந்து இருப்பதால், நான் அமைச்சராக முடியும்'' என்றார். இதற்கு பதிலளித்த சிவகுமார், ''அரசியல் என்பது ஒரு கலை. நீங்கள் எங்கள் பக்கம் வந்திருந்தால், அமைச்சர் ஆகி இருப்பீர்கள்,'' என்றார்.
இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.
பின், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன், 'கிரேட்டர் பெங்களூரு' மசோதா நிறைவேற்றப்பட்டது.