தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது குஜராத் உயர் நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை
தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது குஜராத் உயர் நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை
ADDED : செப் 05, 2024 12:00 AM

புதுடில்லி: வழக்கு ஒன்று தொடர்பான நீதிமன்ற விசாரணை குறித்து தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகைகளின் மன்னிப்பை ஏற்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த பத்திரிகைகள் மீதான அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது.
சிறுபான்மையினர்கல்வி நிறுவனங்கள்தொடர்பான ஒரு வழக்கை, குஜராத் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி நடந்த வழக்கு விசாரணை தொடர்பாக, ஆக., 13ம் தேதி பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.
இவற்றில், 'இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, திவ்ய பாஸ்கர்' ஆகிய பத்திரிகைகளில், தவறான தகவல்களுடன் செய்தி வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடம் விசாரணை நடத்தும்போது, நீதிபதிகள் கூறிய கருத்துகளை, உத்தரவு பிறப்பித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அமர்வு குறிப்பிட்டது.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அரசுக்கான அதிகாரம், ஆசிரியர் நியமனம் தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு கருத்தை உருவாக்கி, அதை கட்டாயப்படுத்துவது போல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாக அமர்வு குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பாக, இந்த மூன்று பத்திரிகை நிறுவனங்களும், தங்களுடைய பத்திரிகையில் முதல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட உத்தரவிடப்பட்டது.
இதன்படி, மன்னிப்பு செய்தி வெளியிடப்பட்டது தொடர்பான அறிக்கைகள், செப்., 2ல் உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அந்த மன்னிப்பு செய்திகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறிய அமர்வு, அந்த அறிக்கைகளை நிராகரித்தது. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்குள் விரிவாகவும், கொட்டை எழுத்துகளிலும் மன்னிப்பு செய்தி வெளியிடும்படி, மூன்று பத்திரிகைகளுக்கும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.
மூன்று பத்திரிகைகளின் அறிக்கைகளை நிராகரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும், அந்த நிறுவனங்கள் மீதான அவமதிப்பு நடவடிக்கைக்கும் தடை விதித்து அமர்வு உத்தரவிட்டுள்ளது.