குஜராத் விளையாட்டு மைய விபத்து: மேலும் ஒருவர் கைது
குஜராத் விளையாட்டு மைய விபத்து: மேலும் ஒருவர் கைது
ADDED : மே 30, 2024 01:14 AM
ஆமதாபாத், குஜராத் விளையாட்டு மைய தீ விபத்து தொடர்பாக, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், டி.ஆர்.பி., விளையாட்டு மையம் உள்ளது. இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுகள் உள்ளன. மேலும், உணவகங்களும் உள்ளன. கோடை விடுமுறையையொட்டி, டி.ஆர்.பி., விளையாட்டு மையத்துக்கு கடந்த 25ம் தேதி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் வந்தனர்.
அங்கு, குழந்தைகள் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தபோது, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தைகள் உட்பட 27 பேர் உடல் கருகி பலியாகினர். சிகிச்சை பலனின்றி மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து விளையாட்டு மையத்தின் உரிமையாளர் தவால் தாக்கர், அதன் பங்குதாரர்களான யுவராஜ்சின் சோலங்கி, ராகுல் ரத்தோட் மற்றும் அதன் மேலாளர் நிதின் ஜெயின் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மேலும் இரண்டு பங்குதாரர்கள் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் விளையாட்டு மையத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கிரித்சின் ஜடேஜா என்பவரை நேற்று ராஜ்கோட்டில் போலீசார் கைது செய்தனர்.
தேடப்பட்ட மற்றொரு பங்குதாரர் பிரகாஷ் ஹிரான், விளையாட்டு மைய தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்தனர். எனவே, இவ்விவகாரத்தில் இதுவரை ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.