ஹலசூரு திருவள்ளுவர் சிலை பூங்கா ஆறு மாதத்தில் பணிகள் நிறைவடையும்
ஹலசூரு திருவள்ளுவர் சிலை பூங்கா ஆறு மாதத்தில் பணிகள் நிறைவடையும்
ADDED : ஜூன் 25, 2024 06:30 AM

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தால், ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள நீலகண்டன் சதுக்கத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை, பல்வேறு இன்னல்களுக்கு பின், 2009 ஆகஸ்ட் 9ம் தேதி, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் தீவிர முயற்சியால், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து ஆகஸ்ட் 9ம் தேதி, 'திருவள்ளுவர் ஊர்வலம்' நடத்தப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தன்றும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சிலை அமைந்துள்ள பூங்கா, பெங்களூரு மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், இரண்டு கோடி ரூபாய் செலவில், புதுப்பொலிவுடன், பூங்காவை புதுப்பிக்க திட்டமிட்டார். இதற்காக, 2022 பிப்ரவரி 28ம் தேதி, பூமி பூஜை செய்தார்.
அதன் பின், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ள பீடத்தை சுற்றியும், பூங்காவையும் புதுப்பிக்கும் பணி துவங்கியது. ஆனால், சிலையை திறந்து வைத்தபோது, கர்நாடக அரசு வைத்த கல்வெட்டை திட்டமிட்டு மறைப்பதாக கூறி, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அதேபோன்ற கல்வெட்டு, முன் பகுதியில் வைக்கப்படுமென, எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.
பணிகள் நடந்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், கொம்புகள் கொண்ட ஆடு உருவம் பொறித்த துணியால், திருவள்ளுவர் சிலையின் முகத்தை விஷமிகள் மறைத்து, இரவு நேரத்தில் கட்டி உள்ளனர்.
இதை நேற்று முன் தினம் பார்த்த தமிழ் ஆர்வலர்கள், போலீசில் புகார் செய்தனர். போலீசாரே நேரில் வந்து, அந்த துணியை அகற்றினர். பின், புனித நீரை கொண்டு, தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் சிலையை சுத்தம் செய்தனர். மாலை அணிவித்து, திருக்குறள் ஓதப்பட்டது.
இந்த தகவல் அறிந்த எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், நேற்று காலை ஆய்வு செய்ய வந்தார். அவரை, பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் சால்வை அணிவித்து வரவேற்றார். தமிழ்ச்சங்க துணை செயலர்கள் பாரி, கோபிநாத், முன்னாள் செயலர் ஸ்ரீதரன், தமிழ் ஆர்வலர்கள் பையப்பனஹள்ளி ரமேஷ் உட்பட வெவ்வேறு தமிழ் ஆர்வலர்கள் இருந்தனர்.
பாரதிநகர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், ஆதரவு கோஷம் எழுப்பினார். திருவள்ளுவர் சிலைக்கு, எம்.எல்.ஏ., மாலை அணிவித்தார்.
அப்போது அங்கிருந்த ஹலசூரு துணை மண்டல உதவி போலீஸ் கமிஷனர் ரங்கப்பாவிடம், இது போன்ற சம்பவம் நடக்காதவாறு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.
பின், ரிஸ்வான் அர்ஷத் கூறியதாவது:
சிலை பூங்கா புதுப்பிக்கும் பணிகள் முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். ஆனால், இதை விட சிறப்பாக அமைக்கப்படும். திருக்குறளை கன்னடம், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பலகையில் பொறிக்கப்படும்.
சிறந்த வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படும். அரசிடம் இருந்து, கூடுதல் நிதி பெற்று வந்து, பணிகள் செய்யப்படும். தற்போது வரை, கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-------------------
...பாக்ஸ்...
திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு
பெங்களூரு தமிழ்ச்சங்கம் கண்டனம்
பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தால் 1991ம் ஆண்டு நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை 18 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்தது. தொடர் போராட்டங்களுக்குப் பின்னர், நீதிமன்றத்தில் போராடி, 2009ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இணைந்து பேசி முடிவெடுத்து, திறந்துவைக்கப்பட்டது.
தொகுதி எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, சிலை அமைந்துள்ள பூங்காவை அழகுபடுத்தும் பணியை செய்து வருகிறார்.
இச்சூழ்நிலையில் நேற்று முன் தினம், சிலர் வள்ளுவர் சிலை முகத்தில், முகமூடி அணிவித்து மறைத்தும், அதன் பின்னர் வேறு ஒரு அணியினர், அதை சுத்தம் செய்கிறோம் என்று கிளம்பி தண்ணீரால் கழுவி, பால் அபிஷேகம் செய்து, வள்ளுவர் சிலைக்கு விபூதி பட்டை அடித்து, குங்குமம் வைத்து உள்ளனர்.
இந்த இரண்டு நிகழ்வுகளும், சமூக வலை தளங்களில் பதிவிடப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு செயல்களையும் பெங்களூரு தமிழ்ச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மனித குலம் இந்த உலகத்தில் உள்ளவரை நிலைத்து நின்று, சிறந்த வாழ்வியல் முறையை திருக்குறளில் வழங்கிய அய்யன் திருவள்ளுவர், தான் எழுதிய திருக்குறளில் எந்த வித சாதி, மதம், கடவுள் பற்றிய குறிப்புகள் இல்லாமல், தம்மை பற்றியும் எதுவும் குறிப்பிடாமல் திருக்குறளை நமக்கு வழங்கி உள்ளார்.
சிறந்த பொதுமறை நுாலை வழங்கிய திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்த அறிவில் சிறந்த சான்றோர் பெருமக்கள் குழு இணைந்து, பல்வேறு கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் உருவாக்கப்பட்ட உருவம் தான், நாம் இப்பொழுது போற்றும் திருவள்ளுவர் உருவம்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, சான்றோர்களின் பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் உருவப்படம், தமிழக சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வரலாறு ஏதும் தெரியாத சில அறிவிலிகள், திருக்குறளில் கூறப்பட்ட கருத்து ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தும், முகமூடி கொண்டு மறைத்தும், வள்ளுவரை போற்றுகிறோம் என்ற பெயரில் பால் அபிஷேகம் செய்து, விபூதி பட்டையை அடித்து, குங்குமம் பூசி மகிழும் அனைவருமே, தமிழ், தமிழர் நல விரோதிகள்.
இவர்களின் இத்தகைய செயல்களை உலக தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்; இவர்களை புறக்கணிக்கவும் வேண்டும்.
மீண்டும் இது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது. இதனை செய்த அனைவரையும் அடையாளம் கண்டு, தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
...புல் அவுட்...
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகள் போன்று, தற்போதைய ஹலசூரு திருவள்ளுவர் சிலை பூங்கா அமைந்துள்ளது. ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தேன். 18 ஆண்டுகள் மூடி வைக்கப்பட்டிருந்து, திறக்கப்பட்ட சிலைக்கு, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
-இராசு மாறன், முன்னாள் தலைவர், பெங்களூரு தமிழ்ச் சங்கம்
...புல் அவுட்...
தமிழர்கள் ஒற்றுமையை சீர்குலைக்க, கன்னடர் தமிழர் நல்லிணக்கத்தை சீர்குலைக்க, சில விஷக்கிருமிகள், திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு செய்துள்ளனர். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். உயர் போலீசார் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
ராமச்சந்திரன், நிறுவன தலைவர், கன்னட தமிழர் நல்லிணக்கம் மற்றும் சமூக நற்பணி அறக்கட்டளை
- நமது நிருபர் -