அரசு பங்களா வழங்கியும் மவுனம் காக்கும் ஜக்தீப் தன்கர்
அரசு பங்களா வழங்கியும் மவுனம் காக்கும் ஜக்தீப் தன்கர்
ADDED : ஆக 22, 2025 12:25 AM

புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அவர் மவுனம் காத்து வருகிறார்.
நாட்டின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜக்தீப் தன்கர், 74. கடந்த மாதம் 21ம் தேதி பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. ராஜ்யசபாவின தலைவராக இருந்த அவர், முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அன்றைய தினமே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், மத்திய அரசுடனான மோதல் காரணமாகவே, ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல், அவர் மவுனம் காத்து வருகிறார். அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை ஒதுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஜக்தீப் தன்கருக்கான பங்களாவையும் தயார் செய்துள்ளது.
அதன்படி, டில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள, 'டைப் -- 8' பங்களாவை, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஜக்தீப் தன்கருக்கு ஒதுக்கியுள்ளது. இருப்பினும், அந்த பங்களாவுக்கு செல்வது தொடர்பாக எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
அரசு விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு, டில்லியில் உள்ள லுட்யென்ஸ் அரசு தோட்டத்தில் டைப் - 8 பங்களா அல்லது அவர்களின் சொந்த ஊரில், 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்.
அரசு பங்களாவை ஜக்தீப் தன்கர் மறுத்தால், இவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கவும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.