ADDED : ஜூன் 01, 2024 06:35 AM

பெங்களூரு: 'பயங்கரவாதி கைது செய்யப்பட்டாலும், போலீஸ் நிலையம் சென்று பிரச்னை செய்வீர்களா' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சாவை, கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தட்சிண கன்னடா, பெல்தங்கடி மேலந்தபெட்டு கிராமத்தில், சட்டவிரோத கல்குவாரி நடத்தியது தொடர்பாக, ரவுடியும், பா.ஜ., பிரமுகருமான சசிராஜ் ஷெட்டியை, பெல்தங்கடி போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்க கோரி பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா போலீஸ் நிலையத்திற்கு சென்று, பிரச்னை செய்தார்.
எஸ்.ஐ.,யை ஒருமையில் திட்டியதுடன், தட்சிண கன்னடா எஸ்.பி., ரிஷியந்த்தையும் விமர்சித்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, ஹரிஷ் பூஞ்சா மீது வழக்கு பதிவானது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் பூஞ்சா மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் விசாரிக்கிறார். நேற்று மனு மீதான விசாரணை நடந்தது.
இருதரப்பு வாதங்கள் முடிந்த பின், நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் கூறுகையில், ''மனுதாரர் எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், போலீஸ் நிலையம் சென்று, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுக்கலாமா. கட்சி தொண்டரை கைது செய்ததாக கூறி போலீஸ் நிலையத்தில் பிரச்னை செய்து உள்ளார்.
''பயங்கரவாதியை கைது செய்தாலும், போலீஸ் நிலையம் சென்று பிரச்னை செய்வீர்களா. இதை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நீதிபதி எப்படி வேலை செய்கிறார் என்று பார்க்க, நீதிமன்றத்தில் வந்து மனுதாரர் அமர்ந்து கொள்வாரா. சட்டத்தை கட்டமைக்க மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பங்களிப்பு வழங்க வேண்டும். அதைவிட்டு போலீஸ் துறையின் கடமையில் தலையிட கூடாது,'' என்றார்.
மனு மீதான விசாரணையை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.