ADDED : ஜூன் 30, 2024 10:43 PM

பெங்களூரு: 'நடிகர் தர்ஷன், தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். எனக்கு உடல் நிலை பாதித்த போது, பை நிறைய பணம் அனுப்பினார்,'' என வில்லன் நடிகர் ஹரிஷ் ராய் தெரிவித்தார்.
கொலை குற்றத்தில் சிக்கினாலும், இவரை ரசிகர்கள் விட்டுத் தரவில்லை. தினமும் இவரை பார்க்க, ஏராளமான ரசிகர்கள் வருகின்றனர். போலீசார் அனுமதி அளிக்காமல், திருப்பி அனுப்புகின்றனர். பல நடிகர், நடிகையர் தர்ஷனுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
கன்னட திரையுலகின், பிரபல வில்லன் நடிகர் ஹரிஷ் ராய், நேற்று அளித்த பேட்டி:
என்னை போன்ற பலர், தர்ஷனை நம்பி வாழ்கிறோம். கலைஞர்கள், சினிமாவில் வெவ்வேறு பணிகளை செய்வோர், இயக்குனர்கள் என, பலரும் இவரை நம்பி வாழ்கின்றனர்.
தர்ஷன் கைதான சம்பவத்தை, எங்களால் ஜீரணிக்க முடியாது. வாழ்க்கையே பறிபோனது போன்றுள்ளது. என் வீட்டில் மட்டுமின்றி, அவரது ரசிகர்களின் வீடுகளிலும், இதே சூழ்நிலை உள்ளது.
எங்களை போன்ற நடிகர்களுக்கு பிரச்னை என்றால், முதலில் வருவது தர்ஷன்தான். அவரை எங்களால் எளிதில் சந்திக்க முடியும்.
என்னை எங்கு பார்த்தாலும், ஏதாவது பிரச்னை உள்ளதா என, விசாரிப்பார். மற்றவரிடமும் கேட்டு தெரிந்து கொள்வார். பலருக்கு உதவியுள்ளார். தான் செய்த உதவியை, எப்போதும் வெளியே சொன்னது இல்லை.
நான் இன்று நலமாக இருக்கிறேன் என்றால், இதற்கு காரணம் தர்ஷன் மற்றும் யஷ். எனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட போது, 'கோடிக்கணக்கில் செலவானாலும், உங்களை காப்பாற்றுவேன்' என, கூறினார். தர்ஷனும் கூட, தன் ரசிகர் மூலமாக பெரிய பையில் பணத்தை என் வீட்டுக்கு அனுப்பினார். இதை யாரிடமும் கூற வேண்டாம் என, அறிவுறுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.