ADDED : ஜூன் 02, 2024 02:29 AM

மூணாறு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், பலத்த மழையால் நிலச்சரிவு, மண் சரிவு ஏற்பட்டது. மழை தொடர்வதால் இரவு பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம், வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்தது. அதன் தொடர்ச்சியாக மலையோர பகுதிகளை விட தாழ்வான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தொடுபுழா - புளியன்மலை மாநில நெடுஞ்சாலையில் மூலமற்றம் கரிப்பிலங்காடு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. நாடுகாணி அருகே மண்சரிவு ஏற்பட்ட போது இரண்டு கார்கள் மண், மரங்களில் சிக்கின.
தொடுபுழா அருகே பூச்சப்ரா - குருதிகுளம் இடையே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. காட்டாற்று வெள்ளம் பல வீடுகளை சூழ்ந்தது. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அப்பகுதி இருளில் மூழ்கியது.
தொடுபுழா அருகே உள்ள மலங்கரை அணையில் நீர்மட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி நேற்று காலை 7:00 மணிக்கு ஐந்து ஷட்டர்கள் உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதனால் தொடுபுழா, மூவாற்றுபுழா ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டது.
மாவட்டத்தில் மழை தொடர்வதால், பாதுகாப்பு கருதி இரவு 7:00 முதல் காலை 6:00 மணி வரை பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.