ஹிமாச்சலில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தால் அவதி
ஹிமாச்சலில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தால் அவதி
ADDED : ஆக 12, 2024 04:07 AM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, 288 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 31ல் பெய்த கனமழையால் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த 9ம் தேதி வரை பெய்த மழை மற்றும் நிலச்சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 842 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டன.
இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் மட்டும், 96 சாலைகள் சேதமடைந்துள்ளன. ஒட்டு மொத்தமாக, மாநிலம் முழுதும் 288 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணியர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர்.
இதற்கிடையே, ஹிமாச்சலின் பிலாஸ்பூர், சாம்பா, ஹமீர்பூர், குலு, மண்டி, சிராமூர், உனா, காங்ரா, சோலன், உனா, சிம்லா ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.