டில்லியில் விடிய விடிய கனமழை போக்குவரத்து நெரிசலால் அவதி
டில்லியில் விடிய விடிய கனமழை போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : ஆக 29, 2024 09:53 PM

சப்தர்ஜங்:டில்லியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பரவலாக கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, நகரில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 77.1 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக லோசி சாலையில் 92.2 மி.மீ., மழை பதிவானது. ரிட்ஜ் 18.2 மி.மீ., பாலம் 54.5 மி.மீ., அயநகர் 62.4 மி.மீ., மழையும் பதிவானது.
கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும் மழை வெள்ளம் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலை வரை தண்ணீர் அப்படியே நின்றதால், வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மத்திய டில்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள ஹரிஷ் வாலி கலியில் இரண்டு மாடி கட்டடத்தின் இரண்டு பால்கனிகள் இடிந்து விழுந்தன.
இரண்டாவது மாடியின் பால்கனி இடிந்து விழுந்து, முதல் மாடி பால்கனியும் இடிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மழை பெய்து கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை 2:50 மணியளவில் சம்பவம் நடந்ததாக தகவல் வெளியானது.

