ADDED : ஜூலை 06, 2024 10:21 PM
புதுடில்லி,:தலைநகர் டில்லியில் வெப்பநிலை நேற்று 34.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது இயல்பை விட இரண்டு டிகிரி குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றில் ஈரப்பதம் 69 - 92 சதவீதம் வரை ஏற்ற இறக்கமாக நிலவியது. டில்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியஸ் நிலவும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அண்டை மாநிலமான ராஜஸ்தானில் தொடர்ந்து கனமழை பெய்கிறது ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரவுலி, டோங்க், நாகவுர் மற்றும் பரான் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், டோங்க் மாவட்டம் தியோலியில் 155 மி.மீ., மழை கொட்டியது. மல்புரா - 144, பீப்லு - 142, டோங்க் - 137, அலிகார் - 130, தோடராய் சிங் - 126, நாகர்போர்ட் - 115 மிமீ மழை பெய்துள்ளது.
ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ராதேஷ்யம் ஷர்மா, “பிகானீர் மற்றும் ஜெய்ப்பூரில் பருவமழை கொட்டித் தீர்க்கிறது. கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் கனமழை தொடரும்.
அதேபோல ஜெய்ப்பூர் மற்றும் பாரத்பூரிலும் மிக கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,”என்றார்.