தரை பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு கடலோர, மலை மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை
தரை பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு கடலோர, மலை மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை
ADDED : ஜூலை 06, 2024 06:16 AM
பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர, மலை மாவட்டங்களில் விடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப் பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் துவங்கும். பருவமழை துவங்கியதும் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி; மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, ஷிவமொகா, குடகில் முதலில் கனமழை பெய்யும். அதன்பின் தான், மற்ற மாவட்டங்களில் மழை பெய்யும்.
* இயல்பு வாழ்க்கை
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது. இந்த முறை சற்று மாற்றமாக பெங்களூரு, மைசூரு, ஹாசன், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடலோர, மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வந்தது. தற்போது தென் மாவட்ட பகுதிகளில் மழை சற்று குறைந்து உள்ளது.
ஆனால் கடலோர, மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
* மூழ்கிய பாறைகள்
மங்களூரு அருகே கெட்டிக்கல் என்ற இடத்தில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுகிறது. இதனால் மங்களூரு -- சோலாப்பூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மங்களூரு பனம்பூர், உல்லால், சோமேஸ்வர், குலாய், பைங்கெரே ஆகிய கடற்கரைகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
குலாய் பகுதியில் மத்திய அரசின் சாகர மாலா திட்டத்தின் கீழ், புதிய துறைமுகம் கட்டும் பணி துவங்கியுள்ளது. துறைமுகம் கட்டும் இடத்தில் கடல் சீற்றத்தை தவிர்க்க பாறைகள் போடப்பட்டிருந்தன. ஆனால், கடல் அலையின் சீற்றத்தால் பாறைகள் கடலில் மூழ்கியுள்ளன.
* படகுகள் மூலம் மீட்பு
உடுப்பி மாவட்டத்தின் பைந்துார் தாலுகாவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த மழை நேற்று காலை வரை கொட்டி தீர்த்தது.
இதனால் நாமுண்டா, சல்புடா, மரவந்தே, படுகோனே ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சல்புடா கிராமத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் வசித்தவர்களை, மீட்பு படையினர் படகுகள் முலம் மீட்டனர்.
* பெண் பலி
குந்தாபூர் அருகே கொல்லுார்ஹள்ளி பேரு கிராமத்தில், மண்சரிவு ஏற்பட்டதில் பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் துாங்கிய அம்பா, 45 என்ற பெண் உயிரிழந்தார்.
ஹெப்ரி தாலுகா மத்தி பட்டு, சிவபுரா, குடிப்பயலு, வரங்கா ஆகிய கிராமங்களிலும் கனமழை பெய்தது. சிவபுராவில் 10 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் இரவு முழுதும் இருளில் தவித்தனர்.
* தண்ணீர் திறப்பு
மற்றொரு கடலோர மாவட்டமான உத்தர கனடாவின் கார்வார், எல்லாபுரா, ஜோய்டா, ஹொன்னாவர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கார்வார் அருகே உள்ள கத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 34.50 மீட்டர் கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 30.33 மீட்டராக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19,676 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 7,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
உத்தர கன்னடா மாவட்டத்தில் ஓடும் அகநாசினி, காளி, கங்காவதி, சியாமளா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தரை பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
* கொட்டும் நீர்வீழ்ச்சி
மலை மாவட்டமான சிக்கமகளூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிருங்கேரி, மூடிகரே பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் சிருங்கேரி அருகே ஹெப்பலே கிராமத்தில் ஓடும் பத்ரா ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்னொரு மலை மாவட்டமான ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளி, சாகர், பிதனுார், ஷிவமொகா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஷிவ மொகா அருகே உள்ள காஜனுார் துங்கா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 19,098 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் துங்கா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடகில் பெய்து வரும் கனமழையால் பாகமண்டலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை பார்க்க சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
* பெங்களூரு
அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் பெய்யும் கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணா, துாத் கங்கா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாகல்கோட் ஜமகண்டியில் உள்ள ஹிப்பரகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 43,390 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் வட மாவட்டங்களான கலபுரகி, பீதரிலும் நேற்று மாலை கனமழை பெய்தது.
பெங்களூரிலும் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. ராஜாஜி நகர், சிவாஜிநகர், விதான் சவுதா, பசவேஸ்வரா நகர், விஜயநகர், மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.