ADDED : செப் 14, 2024 11:21 PM

புதுடில்லி: ''எந்த ஒரு மொழிக்கும் ஹிந்தி போட்டி அல்ல. அனைத்து மொழிகளும் நட்புடனும், ஒன்றுக்கு ஒன்று ஆதரவாகவும் உள்ளன,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
அலுவல் மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி டில்லியில் நேற்று நடந்த ஹிந்தி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
ஹிந்தி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்ததாக அல்லாமல், கலாசார அடிப்படையில் நாடு முழுதும் பரவியுள்ளது.
ஹிந்தி தினத்தின் வாயிலாக, அதை ஒரு தகவல் பரிமாற்ற மொழியாக, ஒரு பொது மொழியாக, ஒரு தொழில்நுட்ப மொழியாக மாற்ற உறுதியேற்றோம். தற்போது, சர்வதேச மொழியாக மாற்ற உறுதியேற்போம்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி என, எந்த ஒரு மொழியாக இருந்தாலும், மக்களிடையே சிறப்பான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே நம் அரசியல் நிர்ணய சபைக்கான அலுவல் மொழிகள் உருவாக்கப்பட்டன.
இதன்படி, ஹிந்தி அலுவல் மொழியாக ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம்.
ஹிந்தி மொழி தொடர்பான இயக்கத்தைப் பார்க்கும்போது, சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி, மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், லாலா லஜ்பத் ராய், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆச்சாரியா ஜே.பி.கிருபாளினி போன்ற ஹிந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பெரும் பங்களிப்பு அளித்துள்ளனர்.
ஹிந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் பரிந்துரையை அளித்த குழுவில் இடம்பெற்றிருந்த என்.கோபாலசாமி அய்யங்கார், கே.எம்.முன்ஷி போன்றோரும் ஹிந்தி பேசாத பகுதியைச் சேர்ந்தவர்களே.
ஹிந்தி எப்போதும் எந்த ஒரு மொழிக்கும் போட்டியாக இருந்ததில்லை. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும், நட்புடனும், ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன. ஒவ்வொரு மொழியும் ஹிந்தியின் வாயிலாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நோக்கமாகும்.
ஒவ்வொரு மொழியும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே, தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.