கர்நாடகாவில் கொடூரம் இஸ்ரேலிய பெண் உட்பட இருவர் கூட்டு பலாத்காரம் 3 ஆண் நண்பர்களை ஆற்றில் தள்ளியதில் ஒருவர் பலி
கர்நாடகாவில் கொடூரம் இஸ்ரேலிய பெண் உட்பட இருவர் கூட்டு பலாத்காரம் 3 ஆண் நண்பர்களை ஆற்றில் தள்ளியதில் ஒருவர் பலி
ADDED : மார் 09, 2025 12:16 AM

கொப்பால்: இஸ்ரேலிய பெண் உட்பட இருவர், மூன்று பேர் அடங்கிய கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் பெண்ணின் மூன்று ஆண் நண்பர்களை கால்வாயில் தள்ளியதில் ஒருவர் பலியானார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவின் விஜயநகரா மாவட்டம், ஹம்பியில், 'யுனெஸ்கோ' அங்கீகரித்த பராம்பரிய சின்னங்கள் உள்ளன. இதை பார்த்து ரசிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர்.
அருகில் உள்ள கொப்பால் மாவட்டம், கங்காவதியில் துங்கபத்ரா ஆற்றின் கரையோரம் ஏராளமான ரிசார்ட்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன், மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த, 27 வயது இளம்பெண் இங்கு வந்து ஒரு ரிசார்ட்டில் தங்கினார்.
கடந்த 6ம் தேதி இரவு 10:30 மணிக்கு இளம்பெண், ரிசார்ட் பெண் உரிமையாளர், அதே ரிசார்ட்டில் தங்கியிருந்த அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மஹாராஷ்டிராவின் பங்கஜ், ஒடிசாவின் பிபாஸ் ஆகியோர், அருகில் உள்ள துங்கபத்ரா அணையின் கால்வாய் பகுதிக்கு சென்றனர். இஸ்ரேலிய பெண், கிட்டார் வாசித்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த மூன்று பேர், 'பெட்ரோல் போட பணம் கொடு' என்று, இஸ்ரேலிய பெண்ணிடம் கேட்டனர். அந்த பெண், 20 ரூபாய் கொடுத்தார். கோபம் அடைந்த மூன்று பேரும், 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு இஸ்ரேலிய பெண் மறுக்கவே, தகராறு செய்தனர்.
இதை தட்டி கேட்ட டேனியல், பங்கஜ், பிபாஸ் ஆகியோரை மூவரும் சேர்ந்து தாக்கி, கால்வாயில் தள்ளினர். பின், இஸ்ரேலிய பெண், ரிசார்ட் பெண் உரிமையாளர் இருவரையும் மிரட்டி, மூன்று பேரும் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர். கால்வாயில் தள்ளப்பட்ட டேனியல், பங்கஜ் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். பிபாஸ் கால்வாயில் மூழ்கி விட்டார்.
போலீசில் மறுநாள் 7ம் தேதி டேனியல் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட, கங்காவதியைச் சேர்ந்த மல்லேஷ், 22, சேத்தன்சாய், 21 ஆகியோரை நேற்று கைது செய்தனர். இன்னொருவரை தேடுகின்றனர். கால்வாயில் மூழ்கிய பிபாஸ் உடல் நேற்று மதியம் மீட்கப்பட்டது.
கொப்பால் எஸ்.பி., ராம் அரசித்தி கூறுகையில், ''இஸ்ரேல் பெண் உட்பட இருவரை கூட்டு பலாத்காரம் செய்த, இரு வாலிபர்களை கைது செய்து உள்ளோம். அவர்கள் இருவரும் மெக்கானிக் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது குடிபோதையில் இருந்தனர். இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளனர்,'' என்றார்.
முதல்வர் சித்தராமையா, 'எக்ஸ்' பதிவில், 'கங்காவதியில் இரண்டு பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது கொடூரமான செயல். மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.
***