மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பம் ஹோட்டல் ஊழியருக்கு 106 ஆண்டுகள் சிறை
மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பம் ஹோட்டல் ஊழியருக்கு 106 ஆண்டுகள் சிறை
ADDED : ஏப் 30, 2024 08:32 PM

மூணாறு:கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலப்பள்ளி சேலக்கரையைச் சேர்ந்த பத்மநாபன் என்ற பிரதீப், 44, மூணாறு அருகே அடிமாலியில், தனியார் ஹோட்டல் பணியாளர். அங்கு உடன் வேலை செய்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பெண்ணின் வீட்டில் தங்கினார்.
அப்பெண்ணின் மன வளர்ச்சி குன்றிய, 15 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த அவர், வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, அடிமாலி மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்து சென்றார். சிறுமி கர்ப்பமுற்றிருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இடுக்கி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. பிரதீப் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்ததால் அவருக்கும், சிறுமிக்கும் டி.என்.ஏ., பரிசோதனை நடத்தப்பட்டு, சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது உறுதியானது.
பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.
தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிராஜுதீன் வழக்கை விசாரித்து, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் பிரதீப்புக்கு, 106 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2.6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.