ADDED : செப் 07, 2024 07:49 AM

ஷிவமொகா: மனைவியை தாக்கியதால் அவர் இறந்துவிடுவார் என்ற பயத்தில், ஆற்றில் குதித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொகாவின் ஹொசநகர் சூரல்கொப்பா கிராமத்தின் சதானந்த பட், 54. இவரது மனைவி சபிதா, 50. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் வேறு ஊர்களில் வேலை செய்கின்றனர்.
சில தினங்களாக, கணவன், மனைவி இடையில் அடிக்கடி, குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மனைவியை, கணவர் சரமாரியாக தாக்கினார். மனைவி மயக்கம் போட்டு விழுந்தார்.
அவர் இறந்து விடுவார் என்று கருதிய சதானந்த பட், வீட்டில் இருந்து வெளியேறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த மனைவி எழுந்தார். நேற்று காலை ரிப்பன்பேட் பகுதியில் ஓடும் துங்கபத்ரா ஆற்றங்கரையோரம், சதானந்த பட் பிணமாக மிதந்தார்.
மனைவி இறந்துவிடுவார் என்ற பயத்தில், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.