ADDED : பிப் 22, 2025 05:25 AM

காடுகோடி: கள்ளக்காதலனுடன் மனைவி இருப்பதை பார்த்து, கோபமடைந்த கணவர் தனது மகள், மருமகனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்தனர்.
கோலார் மாவட்டம், சீனிவாசபுராவை சேர்ந்தவர்கள் எல்லப்பா, 45, அவரது மனைவி அருந்ததி, 37. இவர்களுக்கு பூஜா, 20 என்ற மகள் உள்ளார்.
ஓராண்டுக்கு முன் பூஜாவை, தாய் மாமாவான வெங்கடராமு, 24 என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்கள், பெங்களூரு காடுகோடியில் உள்ள பெலத்துார் காலனியில் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர் கிஷோர் குமார், 38 என்பவருடன் அருந்ததிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த கணவர் எல்லப்பா, மனைவிக்கு புத்திமதி கூறியுள்ளார். சில நாட்கள் அமைதியாக இருந்த அருந்ததி, மீண்டும் கிேஷார் குமாரை ரகசியமாக சந்திக்க துவங்கினார்.
இதை தட்டிக்கேட்ட கணவருடன், அருந்ததி சண்டை போட்டுள்ளார். கோபித்து கொண்டு, பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு ஆறு மாதத்திற்கு முன் வந்து தங்கினார். இங்கிருந்த போதும், கிேஷார் குமாருடனான தொடர்பு நீடித்தது.
நேற்று முன்தினம் மகள் பூஜாவை பார்க்க, தந்தை எல்லப்பா வந்துள்ளார். பெலத்துார் காலனியில் உள்ள பாழடைந்த வீட்டை கடக்கும் போது, தன் மனைவி அருந்ததியும், கிஷோர் குமாரும் ஒன்றாக இருப்பதை கவனித்தார்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற எல்லப்பா, அந்த வீட்டிற்கு சென்று, இருவரையும் சரமாரியாக தாக்கினார். மேலும், தனது மகள், மருகனுக்கு போன் செய்து விஷயத்தை கூறி, அந்த வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு வந்த மகளும், மருமகனுடன் சேர்ந்து இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது, கிஷோர் குமார் இறந்து போயிருந்தார். படுகாயமடைந்த அருந்ததியை, மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த காடுகோடி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து எல்லப்பா, பூஜா, வெங்கடராமுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

