ADDED : மே 03, 2024 07:10 AM
கோரமங்களா: குடும்ப தகராறில் போலீஸ் நிலையம் அருகில், மனைவியை கத்தியால் குத்தி, கணவர் கொலை செய்தார். தலைமறைவாக உள்ள அவரை போலீஸ் தேடுகிறது.
பெங்களூரு கோரமங்களா ஸ்ரீனிவாகிலுவில் வசிப்பவர் மைக்கேல் பிரான்சிஸ், 33. இவரது மனைவி இந்து, 28. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு, காதல் திருமணம் நடந்தது.
இரண்டு பிள்ளைகள் உள்ளனர். காருக்கு பெயிண்ட் அடிக்கும் ஒர்க் ஷாப்பில், மைக்கேல் பிரான்சிஸ் வேலை செய்தார். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்தார்.
இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, பிள்ளைகளை அழைத்து கொண்டு, வெங்கடபுராவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு, இந்து சென்றார். காய்கறி கடையில் வேலை செய்தார். இந்நிலையில் மைக்கேல் பிரான்சிஸ் தினமும், இந்து வேலை பார்க்கும் கடைக்கு சென்று, அவரிடம் தகராறு செய்தார். இதனால் அவர் மீது கோரமங்களா போலீசில், நேற்று மதியம் இந்து புகார் செய்தார்.
மைக்கேல் பிரான்சிஸிடம் மொபைல் போனில் பேசிய போலீசார், விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். வேலையை முடித்துவிட்டு, மாலையில் வருவதாக கூறினார். ஆனால் கத்தியுடன் போலீஸ் நிலையம் அருகே, மனைவிக்காக காத்து இருந்தார்.
அந்த வழியாக நடந்து வந்த, இந்துவை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். உயிருக்கு போராடிய இந்துவை, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார்.
தலைமறைவாக உள்ள மைக்கேல் பிரான்சிஸை போலீஸ் தேடுகிறது.