சித்தாந்தம் இறந்து போனது: குமாரசாமியை சாடிய சிவகுமார்
சித்தாந்தம் இறந்து போனது: குமாரசாமியை சாடிய சிவகுமார்
ADDED : ஏப் 01, 2024 11:47 PM

மாண்டியா : “முன்னாள் முதல்வர் குமாரசாமி, உயிரோடு இருந்தாலும், சித்தாந்தத்தை பொறுத்த வரை இறந்ததுபோன்றுதான்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
குமாரசாமி தாமரைக் கொடியை வைத்துள்ளார். இவர் உயிரோடு இருந்தாலும், சித்தாந்தத்தை பொறுத்த வரை இறந்தது போன்றுதான். மாநில மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். மாண்டியா மக்கள் தன்மானத்துக்கு ஓட்டுப் போடுவர்.
மாண்டியா அரசியலை நினைத்தால், வெட்கமாக இருக்கிறது. ம.ஜ.த., சீட்டுக்காக புட்டராஜு காத்திருந்தார். தற்போது அவரது கதி கோவிந்தா.
கடந்த தேர்தலில் காங்கிரசுடன், ம.ஜ.த., கூட்டணி வைத்திருந்தது. கூட்டணி தர்மத்தின்படி, குமாரசாமிக்காக பணியாற்ற மாண்டியாவுக்கு வந்திருந்தேன். ஆனால், அவரால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
தற்போது தன்னை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியவர்களுடன், குமாரசாமி கூட்டணி அமைத்துஉள்ளார். ஹாசனில் இருந்து, ராம்நகருக்கு வந்த குமாரசாமி, இப்போது அங்கிருந்து, மாண்டியாவுக்கு வந்திருக்கிறார்.
ஜனநாயக நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் யாரும் போட்டியிடலாம்; போட்டியிடட்டும். பெங்களூரு ரூரல் தொகுதியில், தன் மாமாவை களமிறக்கியுள்ளார். அனைத்து தொகுதிகளிலும், குடும்பத்தினரே களமிறங்கினால் தொண்டர்கள் என்ன செய்வர்?
பூசணிக்காய் திருடன் என்றால், சுமலதா அம்பரிஷ் எதற்காக தன் தோளை தொட்டுப் பார்க்க வேண்டும். நான் அவரை சீண்டவே இல்லை. அவரை பற்றிய தகவல் எனக்கு தேவையில்லை. அம்பரிஷுக்கு காங்கிரஸ் என்ன கொடுத்தது என்பது, நாட்டுக்கே தெரியும்.
அவர் இறுதி மூச்சை விடும்போது, என்ன சொன்னார் என்பதும் தெரியும். நாங்கள் அந்த விஷயங்களை, இப்போது பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

