ADDED : ஆக 01, 2024 12:31 AM

குடகு, : ''ஆற்றின் வெள்ளப்பெருக்கால், வீடுகளை இழந்தவருக்கு 2.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அது மட்டுமின்றி புதிதாக வீடும் கட்டித்தரப்படும்,'' என வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்தார்.
குடகில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கேரளாவின், வயநாட்டில் ஏற்பட்ட சூழ்நிலை, கர்நாடகாவிலும் நடக்கலாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களை, நாம் கவனிப்பது இல்லை. கண்ட, கண்ட இடங்களில், ரோடு அமைக்கிறோம்; மரங்களை வெட்டுகிறோம். நம் கால்களை, நாமே கோடாரியால் வெட்டுகிறோம். இதன் பின்விளைவுகள், வயநாட்டில் ஏற்பட்டுள்ளது.
நம் பேராசைகளுக்கு, நாம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன், மாவட்ட கலெக்டர்கள் அடையாளம் காண வேண்டும். அந்த இடங்களில் இருந்து மக்களை, பலவந்தமாக வெளியேற்ற வேண்டும். மக்கள் சம்மதிக்கவில்லை என, அலட்சியப்படுத்த கூடாது.
வெள்ளத்தில் இறங்கி ஆற்றை கடப்போர், செல்பி எடுப்போர் மீது தடியடி நடத்துங்கள். ஆற்றின் வெள்ளப்பெருக்கால், வீடுகளை இழந்தவருக்கு 2.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அது மட்டுமின்றி புதிதாக வீடும் கட்டித்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.