எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரலாம் :மெகபூபா
எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரலாம் :மெகபூபா
UPDATED : ஆக 24, 2024 08:22 PM
ADDED : ஆக 24, 2024 07:00 PM

ஸ்ரீநகர்: எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால், கூட்டணிக்கு வரலாம் என காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகளுக்கு மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி தலைவர் மெகபூபா முப்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப். 18, செப்.25., அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இம்மாநிலத்தில் பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின், தேசிய மாநாட்டு கட்சி, தேசிய காங், கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் மற்றொரு மாநில கட்சியான மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி 90 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.இது குறித்து கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்,
அதில் பி.டி.பி. கட்சி ஆட்சிக்கு வந்தால், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்., கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் உயர்த்தப்படும். பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்றார்.
கூட்டணி குறித்து கேட்டதற்கு , தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும், தொகுதி பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால், இரு கட்சிகளும் கூட்டணியில் இணையலாம்.
என்னைப் பொறுத்தவரை, காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதே முக்கியம். எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.