ADDED : செப் 10, 2024 06:37 AM

குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ளது, பாடி ஸ்ரீ இக்குதப்பா கோவில். கொடவா மக்கள், தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். மழை பெய்வதற்கும், பயிர்கள் நன்றாக வளருவதற்கும் இறைவனை வேண்டி வழிபட்டனர்.
வரலாறு
இக்கோவிலில் ஆண்டுதோறும், தங்கள் வயலில் விளைந்த நெல்லை, முதன் முதலில் இக்குதப்பாவுக்கு விவசாயிகள் படைக்கின்றனர். இதை தொடர்ந்து கூர்க் பகுதியில் 'புத்தரி' எனப்படும் அறுவடை திருவிழா நடத்தப்படுகிறது.
புராணங்கள்படி, கேரளாவில் ஒரு தங்க சங்கில் இருந்து ஒரு பெண், ஆறு ஆண் என ஏழு குழந்தைகள் பிறந்தனர். இதில் மூன்று சகோதரர்கள், கேரளாவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்தனர். பெண் உட்பட மற்ற நான்கு பேர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கூர்க்கிற்கு வந்தனர்.
இவர்கள் நான்கு பேரும் ஒரே இடத்தில் வாழ்ந்து வந்தனர். இதில், மூத்தவரான இக்குதப்பா, குடகில் தங்கி, விவசாயிகளுக்கு உதவி வந்தார். மற்றவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இக்கோவில் மூலஸ்தானத்தில், சிவன் விக்ரஹம் உள்ளது. சிவனே, இக்குதப்பா உருவில் வந்து, தங்களை காப்பதாக கொடவா மக்கள் நம்பினர்.
'துலாபாரம் சேவை'
தினமும் அதிகாலை 5:45 மணிக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு மஹா பூஜை; இரவு 7:00 மணிக்கு மஹா மங்களாரத்தி நடக்கிறது. வாரத்தில் புதன், சனிக்கிழமைகளில், 'துலாபாரம் சேவை' நடத்தப்படும். இந்த கோவிலை, 1810ல் லிங்க ராஜேந்திர ராஜா கட்டினார். ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போது, லிங்க ராஜேந்திராவின் மகன் சிக்க வீர ராஜேந்திரா பதவியில் இருந்து இறக்கப்பட்டார். இதன்பின், திவான் அப்பரண்டா போபு, இக்கோவிலை புதுப்பித்தார்.
கொடவர்கள் குலதெய்வமாக வழிபடும் சிவன்.

