கேரளாவில் தொடர் கனமழையால் 66.89 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம்
கேரளாவில் தொடர் கனமழையால் 66.89 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம்
ADDED : மே 26, 2024 12:34 AM

திருவனந்தபுரம் :கேரளாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், 66.89 ஹெக்டேர் அளவுக்கு விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்ததால் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்து கிடப்பதால் வாகன போக்குவரத்து தடைபட்டது.
இயல்பு வாழ்க்கை
கடலோர மாவட்டமான ஆலப்புழாவின் குட்டநாடு பகுதியில் வீடுகள், கடைகள், பள்ளி களில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர்.
கொல்லம் மாவட்டத்தின் கைகுலங்காராவில் பெய்த கனமழையால் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
இதேபோல் கன்னெட்டுமுக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மற்றொரு வீடு இடிந்து முற்றிலும் சேதமடைந்தது. அதில் இருந்த மூதாட்டி சத்தம் கேட்டு வெளியே வந்ததால் உயிர் தப்பினார்.
கடற்கரை கிராமமான பொழியூரில் சாலைகள் துண்டிக்கப்பட்டும், வீடுகள் இடிந்தும் சேதம்அடைந்தன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் காணப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலையில் திருவனந்தபுரத்துக்கு வரவேண்டிய ரயில்கள் தாமதமாக வந்தன.
திருவனந்தபுரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் 66.89 ஹெக்டேர் நிலத்தில் விளைந்த பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் 720க்கும் அதிகமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மஞ்சள் எச்சரிக்கை
இந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த பகுதியில் 1.80 கோடி ரூபாய் அளவுக்கு விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. திருவனந்தபுரத்தில் மட்டும் நான்கு வீடுகள் முற்றிலும் இடிந்தும், 41 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
இங்கிருந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.