வாரணாசியில் அஜய் ராய் மீண்டும் போட்டி: பகுஜனிலிருந்து வந்தவருக்கும் காங்.,கில் வாய்ப்பு
வாரணாசியில் அஜய் ராய் மீண்டும் போட்டி: பகுஜனிலிருந்து வந்தவருக்கும் காங்.,கில் வாய்ப்பு
ADDED : மார் 25, 2024 01:27 AM

புதுடில்லி:காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட 45 வேட்பாளர்கள் அடங்கிய நான்காவது பட்டியலில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்.,கில் இணைந்த டேனிஷ் அலி உட்பட பல மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில், அஜய் ராய் மூன்றாவது முறையாக களம் காண்கிறார்.
மூன்றாவது முறை
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் நான்காவது பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. மொத்தம் 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, 183 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்., தலைமை இதுவரை அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் காங்., போட்டியிடும் 17 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து மாநில காங்., தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். பிரதமரை எதிர்த்து மூன்றாவது முறையாக இவர் வாரணாசியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில், முதன்முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, 56 சதவீத ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராய், 75,000 ஓட்டுகள் பெற்றார்.
இதே தொகுதியில் அப்போது போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 3.50 லட்சம் ஓட்டுகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு 63 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அஜய் ராய்க்கு 14 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.
இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் டேனிஷ் அலி, கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு, உ.பி.,யின் அம்ரோஹா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழைய தொகுதி
காங்., கோட்டை என வர்ணிக்கப்படும் உ.பி.,யின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
அமேதியில் ராகுலும், சோனியாவின் ரேபரேலி தொகுதியில், பிரியங்காவும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வயநாடு தொகுதியுடன் சேர்த்து அமேதியிலும் ராகுல் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 தேர்தலில், இந்த தொகுதியில் போட்டியிட்ட ராகுல், அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் தொகுதியில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார்.
கடந்த 1991ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவர், அதன் பின் நடந்த லோக்சபா தேர்தல்களில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு பின் தன் பழைய தொகுதியில் களம் காண்கிறார்.
இவர்களை தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் கன்டிலால் புரியா ம.பி.,யின் ரட்லம் தொகுதியில் இருந்தும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மகன் வீரேந்தர் ராவத், ஹரித்வார் தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

