கர்நாடகாவில் தொடர் மழை; அணைகளுக்கு கூடுதல் நீர்வரத்து
கர்நாடகாவில் தொடர் மழை; அணைகளுக்கு கூடுதல் நீர்வரத்து
ADDED : மே 22, 2024 06:42 AM
பெங்களூரு : கர்நாடகாவில் தொடர் மழையால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடலோரம், மலை பிரதேசம், வறட்சி பகுதிகள் மட்டுமின்றி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பெய்கிறது.
குறிப்பாக, குடகு, மைசூரு, சாம்ராஜ் நகர், மாண்டியா, ஹாசன், ராம்நகர், பெங்., ரூரல், பெங்களூரு ஆகிய மாவட்டங்களிலும் சில நாட்களாக மிதமானது முதல், கன மழை பெய்கிறது.
நேற்றும் பல பகுதிகளில், பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. வறட்சியால் பாதித்த விவசாயிகள், தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், காவிரி நீர்ப்பிடிப்பு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இம்மாதம், 10ம் தேதி நிலவரப்படி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய நான்கு அணைகளுக்கும் சேர்த்து, வினாடிக்கு 394 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைகளில் இருந்து, வினாடிக்கு 1,048 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது, தொடர் மழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 356 கன அடி வரத்தும்; 200 கன அடி வெளியேற்றமும் உள்ளது.
ஹேமாவதி அணைக்கு வினாடிக்கு, 1,855 கன அடி வரத்தும்; 250 கன அடி வெளியேற்றமும் உள்ளது. கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 1,832 கன அடி வரத்தும்; 272 கன அடி வெளியேற்றமும் உள்ளது.
கபினி அணைக்கு வினாடிக்கு, 841 கன அடி வரத்தும்; 300 கன அடி வெளியேற்றமும் உள்ளது.
அதாவது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளின் நான்கு அணைகளுக்கும் சேர்த்து, நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு, 4,434 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 572 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
'தொடர்ந்து சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

