கர்நாடகாவில் தொடர் மழையால் மின் துறைக்கு ரூ.96 கோடி நஷ்டம்
கர்நாடகாவில் தொடர் மழையால் மின் துறைக்கு ரூ.96 கோடி நஷ்டம்
ADDED : ஜூலை 31, 2024 05:39 AM

பெங்களூரு, : ''தொடர் மழையால், 53,816 மின் கம்பங்கள், 3,924 மின்மாற்றிகள், 1,120 கி.மீ., மின் ஒயர்கள் சேதம் அடைந்துள்ளன. கர்நாடக மின் வாரியங்களுக்கு 96.66 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என மின்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
சிக்கமகளூரில் மழை பாதிப்பு பகுதிகளில், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான ஜார்ஜ், கடந்த வாரம் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, பெங்களூரு பெஸ்காம் அலுவலகத்தில், மாநிலம் முழுதும் மழை பாதிப்பு குறித்து மின் துறை உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை, 1,403 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 30 முதல், 40 கோடி ரூபாய் மின்சாரம் பயனாகிறது.
தற்போது, மாநிலத்தில் தினமும் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு தலா 20 மெகாவாட் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
அவர்கள் கோடை காலத்தில், நமக்கு வழங்கியதை திருப்பி கொடுக்கப்படுகிறது.
தொடர் மழையால், 53,816 மின் கம்பங்கள், 3,924 மின்மாற்றிகள், 1,120 கி.மீ., மின் ஒயர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், கர்நாடக மின் வாரியங்களுக்கு 96.66 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. மின்துறை ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பகுதிகள், பெலகாவியில் மழை, வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து, மின் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.