கேரளாவில் தொடர்மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு *காரில் மரம் விழுந்து பெண் பலி
கேரளாவில் தொடர்மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு *காரில் மரம் விழுந்து பெண் பலி
ADDED : ஜூலை 17, 2024 07:56 PM
திருவனந்தபுரம்:கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு ஒரே நாளில் 8 பேர் பலியான நிலையில் பல்வேறு சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
ஒரு வாரமாக கேரளாவில் பலத்த மழை பெய்கிறது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது மண் சரிவது, வீடுகள் இடிவது, மரங்கள் சாய்வது தொடர்கிறது. நேற்று முன்தினம் 8 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே வழயிலாவில் மோளி 42, கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது பெரிய மரம் முறிந்து காரின் மேல் விழுந்தது. இதில் கார் நொறுங்கி இடிபாடுக்குள் சிக்கி மோளி இறந்தார். கணவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஆறு வட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, திருவனந்தபுரம், கொல்லம் தவிர மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. கனமழையால் கண்ணுார் கோழிக்கோடு வயநாடு உள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன.
பாலக்காடு மாவட்டத்தில் அருவிகளுக்குக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொன்முடி, கோட்டயம் மாவட்டத்தில் இலவீழா பூஞ்சிறா, இல்லிக்கல், மார்மலா அருவிகளுக்கு, பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி, நெல்லியம்பதி, பரம்பிக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மாவட்டம் ஈராற்றுபேட்டை வாகமண் ரோட்டில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் மலையேற்றத்தை நிறுத்தியும், சாகச பூங்காக்களை மூடவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆக., 3 வரை கேரளாவில் பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சபரிமலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மலையேறுவதில் சிரமப்படுகின்றனர். கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து திரும்பிகின்றனர்.