ADDED : மே 30, 2024 06:37 AM

பெங்களூரு: கர்நாடகாவில் 2020ல் பிட்காயின் முறைகேடு வழக்கு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.சி.பி., போலீசார் விசாரித்தனர். பெங்களூரு ஜெயநகரின் ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 29, கைது செய்யப்பட்டார். பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
வழக்கு விசாரணையின்போது, ஸ்ரீகிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பிட்காயின் முறைகேடு வழக்கு, சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.ஐ.டி., நடத்திய விசாரணையில், சி.சி.பி., போலீசார் சிலர், சாட்சியங்களை அழிக்க, பிட்காயின்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஒன்பது பேர் மீது, பெங்களூரு காட்டன்பேட் போலீசில் வழக்கும் பதிவானது.
ஸ்ரீகிருஷ்ணாவை பயன்படுத்தி, பிட்காயின்களை மாற்றி தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணமாக மாற்றியதாக, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் பிரசாந்த் பாபு, லட்சுமி காந்தய்யா, சைபர் நிபுணர் சந்தோஷ் ஆகியோர், சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
பிட்காயின்களை மாற்றியதில், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரதர், 48, என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. சில தினங்களாக, அவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். நேற்று மாலை சந்திரதரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.