திருமா, வெங்கடேசன் 'நக்சலைட்' சிந்தனை கொண்டவர்கள்: ஹிந்து முன்னணி
திருமா, வெங்கடேசன் 'நக்சலைட்' சிந்தனை கொண்டவர்கள்: ஹிந்து முன்னணி
UPDATED : ஜன 03, 2026 02:43 AM
ADDED : ஜன 03, 2026 02:24 AM

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலையில், தமிழக அரசு தீபம் ஏற்ற தவறினால், ஹிந்து முன்னணியும், முருக பக்தர்களும் மலையில் தீபம் ஏற்றுவோம்,'' என, ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, மதுரையில் உயிரிழந்த பூர்ணசந்திரனின் 16ம் நாள் துக்க அனு சரிப்பு நேற்று நடந்தது.
இதில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், காடேஸ்வரா சுப்ரமணியம் அளித்த பேட்டி:
முருகனுக்காக, தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த பூர்ணசந்திரன் தன் உடலையே தீபமாக எரித்து உள்ளார். அவரது தியாகம் வீண் போகாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றத் தவறினால், ஹிந்து முன்னணியும், முருக பக்தர்களும் சேர்ந்து மலையில் தீபம் ஏற்றுவோம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் ஆகிய இருவரும் நக்சலைட்களின் சிந்தனையை கொண்டவர்கள். கோவில்கள், ஹிந்து கடவுள்கள், ஹிந்து பெண்கள் குறித்து அவதுாறு பேசிய திருமாவளவன், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை பற்றி பேசுவதில்லை.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி தீபத்துாணை அளவைக்கல் எனக்கூறி முருக பக்தர்களை கொச்சைப்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

