காந்தேஷ் குறித்த அவமதிப்பு வீடியோ, செய்தி வெளியிட தடை
காந்தேஷ் குறித்த அவமதிப்பு வீடியோ, செய்தி வெளியிட தடை
ADDED : மே 04, 2024 11:00 PM

ஷிவமொகா: ''தன்னை அவமதிக்கும், எந்த வீடியோ அல்லது செய்தியை ஊடகங்கள் வெளியிட, காந்தேஷ் தடை உத்தரவு பெற்றுள்ளார்,'' என, ஷிவமொகா சுயேச்சை வேட்பாளர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
நமது உலக தலைவரான நரேந்திர மோடி, மீண்டும் இந்நாட்டின் பிரதமராக வேண்டும். இது இந்தியா மட்டுமின்றி, உலக மக்களின் விருப்பமாகும்.
தேர்தலுக்கு பின் மீண்டும் பா.ஜ.,வில் இணைய வேண்டும் என, நான் விரும்புகிறேன். நான் சுயேச்சை வேட்பாளராக ஒரு தொகுதியை கைப்பற்றுவேன். கர்நாடகாவில் 28 எம்.பி.,க்கள், மோடி பிரதமராக பங்களிப்பை அளிப்பர். பா.ஜ., என் தாய். தேர்தலுக்கு பின், என் தாயிடம் செல்வேன்.
என்னையும், ஜெகதீஷ் ஷெட்டரையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, பா.ஜ., மேலிடம் கூறியது. நான் போட்டியிடவில்லை என, நான் கடிதம் எழுதினேன். ஆனால் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வை விட்டு விலகி, காங்கிரசுக்கு சென்று போட்டியிட்டு தோற்றார்.
தற்போது மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்பி பெலகாவியில் போட்டியிடுகிறார். கட்சியை விட்டுச் சென்ற இவர், பா.ஜ.,வில் சேரவில்லையா? அது போன்று நானும் சேருவேன்.
தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்ற பீதியில், சிலர் என் மகன் காந்தேஷுக்கு எதிராக சதி செய்கின்றனர். எனவே தன்னை அவமதிக்கும், எந்த வீடியோ அல்லது செய்தியை ஊடகங்கள் வெளியிட கூடாது என, காந்தேஷ் தடை உத்தரவு பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.