ADDED : ஜூன் 29, 2024 11:03 PM
பெங்களூரு: பெங்களூரில் 16 மெட்ரோ ரயில் நிலையங்களில், 'இன்டர்சேஞ்ச்' அமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு செல்லகட்டா -- ஒயிட்பீல்டு; நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிடியூட் பகுதிகளுக்கு இடையில், தற்போது மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த இரு ரயில் பாதைகளுக்கும், மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் இன்டர்சேஞ்ச் ஆக உள்ளது.
அதாவது ஒரு ரயிலில் செல்லும் பாதையிலிருந்து, இன்னொரு ரயில் செல்லும் பாதையில் உள்ள இடங்களுக்கு செல்ல, மெஜஸ்டிக்கில் இறங்கி, ரயில் மாறிக் கொள்ளலாம்.
இந்நிலையில், ஆர்.வி., ரோடு -- பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பாதையில், ரயில் சேவை துவங்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் சில வழித்தடங்களில், புதிய ரயில் சேவை துவங்கவும் வாய்ப்பு உள்ளன.
இதனால் பெங்களூரில் புதிதாக 16 ரயில் நிலையங்களில் இன்டர்சேஞ்ச் துவங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஜெயதேவா சந்திப்பு, எம்.ஜி., ரோடு, கே.ஆர்., புரம், ஹொசஹள்ளி, மைசூரு ரோடு, பீன்யா, ஆர்.வி., ரோடு, ஜே.பி., நகர், டெய்ரி சதுக்கம், நாகவாரா, கெம்பாபுரா, ஹெப்பால், அகரா, சென்ட்ரல் சில்க் போர்டு, சும்மனஹள்ளி, ஜே.பி., நகர் 4வது கிராஸ் ஆகிய 16 மெட்ரோ ரயில் நிலையங்களை, ரயில் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
இந்த ரயில் நிலையங்களில், இன்டர்சேஞ்ச் அமைப்பது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.