பரம்பரைகள் இணைந்து விளையாடும் திருவிழா ஹாக்கி விளையாட்டின் தாயகம் குடகு பரம்பரைகள் இணைந்து விளையாடும் திருவிழா
பரம்பரைகள் இணைந்து விளையாடும் திருவிழா ஹாக்கி விளையாட்டின் தாயகம் குடகு பரம்பரைகள் இணைந்து விளையாடும் திருவிழா
ADDED : செப் 06, 2024 05:59 AM

கர்நாடகாவின் குடகு மாவட்டம், பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. காவிரி ஆறு உற்பத்தியாவதும் இங்கே தான். மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் நம் ராணுவத்தில் இணைவதும் குடகு மக்கள் தான்.
ஆச்சரியங்கள் கூடிய, வித்தியாசமான திருவிழாக்கள் நடப்பதும் இங்கே தான். அந்த வகையில், ஹாக்கி விளையாட்டுக்கு பெயர் பெற்ற மாவட்டமும் குடகு தான்.
தாயகம்
ஹாக்கி விளையாட்டின் தாயகமாகவும் நம் நாடு பெருமை பெற்றது. அப்படிப்பட்ட ஹாக்கி, கொடவா மக்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது என்றே சொல்லலாம். சர்வதேச போட்டிகளில், இந்தியாவுக்காக விளையாடிய 50க்கும் அதிகமான ஹாக்கி வீரர்கள், குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னால், நம்பி தான் ஆக வேண்டும்.
இதில், எம்.பி.கணேஷ், எம்.எம்.சோமையா, செப்புடிரா எஸ்.பூனச்சா உட்பட 7 பேர், ஒலிம்பிக்கில் விளையாடி உள்ளனர். காலம் காலமாக கொடவா மக்கள் ஹாக்கியை விளையாடி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
வருங்கால சந்ததியினருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் கொடவா மக்கள் இணைந்து, ஒரு இடத்தில் கூடி ஹாக்கி திருவிழா நடத்தி மகிழ்கின்றனர்.
ஹாக்கி நடுவராக இருந்த பாண்டண்டா குட்டப்பா என்பவரின் முயற்சியால், 1997 முதல் ஹாக்கி திருவிழா நடத்தப்படுகிறது. முதல் முறை நடந்த திருவிழாவில், 60 பரம்பரை வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பரம்பரை வீரர்
தற்போது, 200க்கும் அதிகமான பரம்பரை மக்கள் விராஜ்பேட்டை அருகில் உள்ள கரடா கிராமத்தில் ஹாக்கி திருவிழா நடத்துவது சிறப்புக்குரிய விஷயமாகும். ஒவ்வொரு அணியிலும், ஒரு பரம்பரை வீரர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
சம்பந்தப்பட்ட பரம்பரை வீரர்கள், குறிப்பிட்ட போட்டிக்கான விளையாட்டு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். மகளிர் பங்கேற்றால், திருமணமானவர்களாக இருந்தால், பிறந்த வீட்டுக்கு விளையாடுவரா அல்லது புகுந்த வீட்டுக்கு விளையாடுவரா என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது இப்படி பல விதிமுறைகள் உள்ளன.
கடைசியாக இந்தாண்டு மார்ச் 30ம் தேதி முதல், ஏப்ரல் 28ம் தேதி வரை குந்தியோலந்தா கொடவா ஹாக்கி திருவிழா, நாபோக்லுவில் நடந்தது. 300க்கும் அதிகமான பரம்பரையை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
நாட்டில் நடக்கும் மிக பெரிய ஹாக்கி திருவிழா என்பதால், 'லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது
. - நமது நிருபர் -