கவர்னருக்கு காங்., பிரமுகர்கள் மிரட்டல்; டி.ஜி.பி.,யிடம் பா.ஜ., தலைவர்கள் புகார்
கவர்னருக்கு காங்., பிரமுகர்கள் மிரட்டல்; டி.ஜி.பி.,யிடம் பா.ஜ., தலைவர்கள் புகார்
ADDED : ஆக 20, 2024 11:42 PM

பெங்களூரு : கவர்னருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பயன்படுத்தி பேசிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநில டி.ஜி.பி., அலோக் மோகனிடம் பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர்.
'மூடா' முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
அமைச்சர்கள்
அப்போது, அமைச்சர்கள் ஜமீர் அகமது கான், கிருஷ்ணபைரே கவுடா, தினேஷ் குண்டுராவ், எம்.எல்.சி.,க்கள் சலீம் அகமது, ஐவான் டிசோசா உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள், கவர்னருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தினர்.
குறிப்பாக, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நடந்த போராட்டத்தின்போது ஐவான் டிசோசா பேசுகையில், 'வங்கதேச பிரதமரை அந்நாட்டில் இருந்து வெளியேற்றியது போல், கவர்னரையும் வெளியேற்றுவோம்' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் தலைமையிலான பா.ஜ.,வின் எஸ்.சி., பிரிவு தலைவர்கள், பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள அலுவலகத்தில், மாநில டி.ஜி.பி., அலோக் மோகனிடம், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக புகார் அளித்தனர்.
பின், கோவிந்த் கார்ஜோள் கூறியதாவது:
மாநில அரசின் துாண்டுதலின்படி, கவர்னருக்கு எதிராக காங்கிரசார் போராட்டம் நடத்தி உள்ளனர்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கவர்னரை அவமானப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர்.
பகிரங்க மிரட்டல்
கவர்னரின் படத்தை செருப்பால் அடித்தும், தவறான வார்த்தைகளால் வாய்க்கு வந்தபடியும் திட்டியுள்ளனர். எம்.எல்.சி., ஐவான் டிசோசா, வங்கதேச பிரதமரை வெளியேற்றிய நிலைமை கவர்னருக்கும் ஏற்படும் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை பார்க்கும்போது, அவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். கவர்னர் மீது தவறாக பேசிய அனைத்து காங்., தலைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, கோலார் முன்னாள் எம்.பி., முனிசாமி, எம்.எல்.ஏ.,க்கள் சிமென்ட் மஞ்சுநாத், அவிநாஷ் ஜாதவ் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதுபோன்று, ஐவான் டிசோசாவுக்கு எதிராக, மங்களூரிலும் பா.ஜ.,வினர் நேற்று போலீசில் புகார் செய்தனர்.

