அஜர்பைஜான் ஜெட் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம்; ஒப்புக் கொண்டார் ரஷ்ய அதிபர் புடின்
அஜர்பைஜான் ஜெட் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம்; ஒப்புக் கொண்டார் ரஷ்ய அதிபர் புடின்
ADDED : அக் 09, 2025 09:23 PM

மாஸ்கோ: கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் ஜெட் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு, அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், 'எம்ப்ரேயர் 190' ரக பயணியர் விமானம் புறப்பட்டது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் வான் பரப்பில் இந்த விமானம் பறந்தபோது, அக்தாவ் நகரில் தரையிறங்க முயற்சித்தது.
அடுத்த சில நிமிடங்களில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இரு பாகங்களாக, விமானம் உடைந்த நிலையில், இரு விமானியர் உட்பட 38 பேர் இந்த கோர விபத்தில் பலியாகினர். இந்த விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணத்தில் மர்மம் நீடித்து வந்தது.
இந்நிலையில், தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலீவ் உடனான சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ரஷ்ய அதிபர் புடின் முதல்முறையாகப் பொறுப்பேற்று உள்ளார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: ரஷ்யா எல்லையைத் தாண்டிய மூன்று உக்ரைன் டிரோன்களைக் கண்காணித்து வந்தது. அப்போது ரஷ்யாவால் ஏவப்பட்ட இரண்டு வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை நேரடியாகத் தாக்கவில்லை.
அதேநேரத்தில், ரஷ்ய ஏவுகணையால் விமானம் சேதமடைந்து உள்ளது. இருந்தாலும், சில மீட்டர் தொலைவில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அந்த நேரத்தில், உக்ரைன் டிரோன்களை எதிர்கொள்ள ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டது. விமானத்தை வீழ்த்தியதற்கு ரஷ்ய ஏவுகணைகள் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.