ஹங்கேரி எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஹங்கேரி எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ADDED : அக் 09, 2025 04:40 PM

ஸ்டாக்ஹோம் : ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கம், பட்டயம், பணப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்விருது, ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை பெற உள்ளார்.
பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர்.