'நிரவ் மோடி, விஜய் மல்லையா தப்பிக்க விசாரணை அமைப்புகள் தான் காரணம்' : மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கருத்து
'நிரவ் மோடி, விஜய் மல்லையா தப்பிக்க விசாரணை அமைப்புகள் தான் காரணம்' : மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கருத்து
ADDED : ஜூன் 03, 2024 11:09 PM

மும்பை: 'பண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா ஆகியோரை, விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் கைது செய்ய தவறியதால், அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர்' என, மும்பை சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
பி.எம்.எல்.ஏ., எனப்படும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட வியோமேஷ் ஷா என்பவர், வெளிநாடு செல்ல நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறுவதற்கான ஜாமின் நிபந்தனையை கைவிடக் கோரி, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, சிறப்பு நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வியோமேஷ் ஷாவின் விண்ணப்பத்தை அனுமதிக்கக் கூடாது.
'நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்சி ஆகியோர் தப்பி ஓடியது போல் இவரும் தப்பிக்கக் கூடும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், சிறப்பு நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே கூறியதாவது:
அமலாக்கத் துறையின் வாதத்தை ஆழமாக ஆய்வு செய்தேன். சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் கைது செய்யாததால் தான், நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா ஆகியோர் வெளி நாடுகளுக்கு ஓடினர்.
வியோமேஷ் ஷாவின் வழக்கை அவர்களுடன் ஒப்பிட முடியாது. இந்த வழக்கு தொடர்பாக, பல முறை நீதிமன்றத்தில் வியோமேஷ் ஷா ஆஜராகி உள்ளார். மேலும், வெளிநாடு செல்லவும் அவ்வப்போது விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்து, வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.
பிரிட்டனில் உள்ள சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ள நிலையில், மெஹுல் சோக்சி, ஆன்டிகுவாவில் உள்ளார். விஜய் மல்லை யாவும் பிரிட்டனில் உள்ளார்.