கர்தவ்ய பவன் கட்டியதால் ரூ.1,500 கோடி மிச்சம்: பிரதமர் மோடி
கர்தவ்ய பவன் கட்டியதால் ரூ.1,500 கோடி மிச்சம்: பிரதமர் மோடி
UPDATED : ஆக 06, 2025 10:12 PM
ADDED : ஆக 06, 2025 10:08 PM

புதுடில்லி: '' டில்லியில் மத்திய அரசின் அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கின. இதனால், அரசுக்கு ரூ.1,500 கோடி செலவாகியது, '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் கட்டப்பட்ட கர்தவய பவனை பிரதமர் மோடி இன்று காலை திறந்துவைத்தார். இதன் பிறகு இன்று மாலை, நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நவீன இந்தியாவின் உருவாக்கம் தொடர்பான சாதனைகளை நாம் பார்த்து வருகிறோம். கர்தவய பாதை, புதிய பார்லிமென்ட் , பாதுகாப்பு அமைச்சக புதிய கட்டடம், பாரத் மண்டபம், தேசிய போர் நினைவகம். தற்போது கர்தவய பவன். இவை வெறும் சாதாரண உள்கட்டமைப்புகள் அல்ல. இங்கு தான் வளர்ச்சியடைந்த நாட்டிற்கான கொள்கைகள் வகுக்கப்பட உள்ளன. முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். வருங்காலங்களில் நாட்டிற்கான திசைகள் இங்கு இருந்து தான் தீர்மானிக்கப்படும்.
இந்த கட்டடத்துக்கு கர்தவய பவன் என்ற பெயரை நீண்ட ஆலோசனைக்கு பிறகே வைத்தோம். கர்தவய பாதை, கர்தவய பவன் ஆகியன நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை மாண்புகளை குறிக்கிறது.இந்திய கலாசாரத்தில், கர்தவய என்ற வார்த்தை, கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றுடன் முடிவது இல்லை. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, நிர்வாக அலுவலகங்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டங்களில் செயல்பட்டு வந்தன.
நிர்வாக அலுவலக கட்டடங்களின் நிலைமை மோசமாக இருந்தது. அங்கு போதிய இடம், வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இல்லை. முக்கியமான அமைச்சகமான மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய வசதி இல்லாத கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இந்திய அரசின் பல அமைச்சகங்கள், டில்லியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வந்தன. அவற்றில் பல அமைச்சகங்கள் வாடகை கட்டடங்கள் இயங்கின. இதனால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி செலவாகிறது. இந்தளவு பணம், வெறும் வாடகை செலுத்த மட்டும் பயன்படுத்தப்பட்டது. இன்னும் பல கர்தவய பவன்கள் வர உள்ளன. இந்த பவன், வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவான இந்தியாவுக்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.